![]()
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை அதிமுகவில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி கடிதம் தந்துள்ளார். பழிவாங்க வேண்டும் என்றால் அதிமுக 1, 2 என்று பிரித்து இருக்கலாம். ஆனால் முதல்வர் நாகரிகமான அரசியல் நடத்துவதாக சபாநாயகர் அப்பாவு பாராட்டு தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டம் பட்ஜெட் உரையுடன் கடந்த மாதம் 20ம் தேதி கூடியது. சுமார் ஒரு மாதம் நடந்த பேரவை கூட்டம் நேற்று பிற்பகல் முடிவடைந்தது. நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: எதிர்க்கட்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டு, அவர்களுக்கு இடைஞ்சல் செய்கின்ற அளவிற்கு ஏதேனும் வாய்ப்பு ஏற்பட்டால் எல்லோரும் பயன்படுத்துவார்கள். ஆனால் நமது முதல்வர், அவ்வாறு நிலை ஏற்பட்டு, எதிர்க்கட்சி தலைவர், நம்முடைய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உறுப்பினர்கள் அய்யப்பன், பால் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம் போன்றோரை அவர்கள் இயக்கத்தில் (அதிமுகவில்) இருந்து நீக்கியதாக ஒரு தபால் தந்திருக்கிறார். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது.
சரியாக அவர்களை பழிவாங்க வேண்டுமென்று சில அரசியல் தலைவர்கள் நின்றால், அதிமுக-1, 2 என்று அவர்களை பிரித்துக் கொடுத்து, எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யலாம். ஒரு காலத்தில் ‘ஜா’ அணி, ‘ஜெ’ அணி என்றெல்லாம் இருந்ததை முதலமைச்சர் மறந்திருக்க மாட்டார். எவ்வளவு பெருந்தன்மையாக, அது எதிர்க்கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி உள் விவகாரங்களில் தலையிடுவது நாகரிகம் இல்லை என்று சொல்லி ஒரு நாகரிகமான, ஜனநாயக முறையில் பண்பான, ஒரு கண்ணியம்மிக்க அரசியலையும் நடத்தி, ஆட்சியையும் நடத்துகின்ற முதல்வரை இந்த பேரவையின் சார்பாக நன்றியோடு பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாக எடப்பாடி கடிதம் பழிவாங்க வேண்டும் என்றால் அதிமுக 1, 2 என்று பிரித்து இருக்கலாம்: முதல்வர் நாகரிகமான அரசியல் நடத்துவதாக சபாநாயகர் பாராட்டு appeared first on Dinakaran.
