×

பழநியில் தூய்மை பணி சண்முகநதி கரையோரத்தில் 5 டன் குப்பைகள் அகற்றம்

 

பழநி, ஏப். 21: பழநி சண்முகநதி கரையோரத்தில் நடந்த தூய்மை பணியில் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 3 மாதங்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் நடந்தன. இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்றனர். இவ்வாறு வந்த பக்தர்களில் பலர் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புண்ணிய நதியான சண்முகநதியில் குளித்து புனித நீராடி சென்றனர். நீராடிய பக்தர்கள் பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற குப்பைகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த குப்பைகள் சண்முகநதி ஆற்றின் கரையோரம் நேற்று மலைபோல் குவிந்திருந்தன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பக்தர்கள் முகம் சுளித்து வந்தனர். இதனை தூய்மைப்படுத்த வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் உத்தரவின்பேரில் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் குழுவினர் நேற்று சண்முகநதி ஆற்றின் கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 டன் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அள்ளப்பட்டு கோயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்று அப்புறப்படுத்தப்பட்டன. கோயில் நிர்வாகத்தின் துரித நடவடிக்கை பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post பழநியில் தூய்மை பணி சண்முகநதி கரையோரத்தில் 5 டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Shanmukunati ,Palani Chanmukunati ,Padani ,Vadani ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து