×

கமுதி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

 

கமுதி: கமுதி அருகே பெரிய நாச்சியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாதர் சுவாமி குருபூஜை விழா மற்றும் பெரிய நாச்சியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நடைபெற்ற பொங்கல் விழாவில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து கோவில் முன்பு பொங்கல் வைத்து, தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும்,உடல் முழுவதும் களிமண் சேரு பூசி,சேத்தாண்டி வேடம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் பலர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் நிறைவு நாளான நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாடுகள் 7 ஜோடியும், சிறிய மாடுகள் 19 ஜோடியும் என இரு பிரிவுகளாக இந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது பரிசாக ரூ.30 ஆயிரம், 2வது பரிசு ரூ.27 ஆயிரம், 3வது பரிசாக ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில்,முதலாவது பரிசாக ரூ.24 ஆயிரம், 2வது பரிசாக ரூ.21 ஆயிரம், 3வது பரிசாக ரூ.18 ஆயிரம் மாடுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கேற்க ராமநாதபுரம், தூத்துக்குடி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post கமுதி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Bullock Cart ,Kamudi ,bullock ,Chitrai Pongal ,Periya Nachyamman ,Dinakaran ,
× RELATED சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்