×

சாலையோரங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளால் அபாயம்

ஊட்டி:ஊட்டி – தெப்பக்காடு சாலையோரங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளால் விலங்குகளுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அந்நிய தாவரங்களான பார்த்தீனியம், லேன்டானா போன்ற செடிகள் வனங்களை ஆக்கிரமித்து வருகின்றன. இதில், பார்த்தீனியம் செடிகள் கொடிய சரும நோய்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை உண்டாக்க கூடியது. இச்செடிகள் உடலில் எங்கு பட்டாலும், படும் இடங்களில் அரிப்பு உள்ளிட்ட தோல் வியாதிகள் ஏற்படும். அதேபோல், இச்செடிகளை தவறி கையில் தொட்டுவிட்டு, அதனை நுகர்ந்தாலோ அல்லது இச்செடிகள் அதிகள் உள்ள பகுதிகளில் குடியிருந்தாலோ சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னை ஏற்படும். மேலும், இந்த செடிகளால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், இச்செடிகளை அழிக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில், இவற்றை அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் ஊட்டி – தெப்பக்காடு சாலையில் கல்லட்டி முதல் மசினகுடி வரை சாலையோரங்களில் இந்த செடிகள் ஆக்கிரமித்துள்ளன. அதேபோல், மசினகுடி முதல் தெப்பக்காடு வரையிலும் அங்காங்கே பல இடங்களில் இந்த பார்த்தீனியம் செடிகள் காணப்படுகின்றன. இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், வனங்களில் விலங்குகளை பார்த்தாலோ அல்லது உணவு உட்கொள்ளவோ அங்காங்கே வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர். இந்த செடிகளின் பாதிப்பு குறித்து தெரியாமல் பலர் அதனை பிடித்து விளையாடுவது, அதன் மீது அமர்ந்து உணவு உட்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல், விலங்குகளை பார்த்தாலும், ஆர்வத்தில் புகைப்படம் எடுப்பதற்காக வாகனங்களில் இருந்து இறங்கி பார்த்தீனியம் செடிகளுக்குள் நடந்து செல்கின்றனர்.இதனால், அவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஊட்டியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையோரங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும். மேலும், இச்செடிகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சாலையோரங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளால் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Theppakadu ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...