×

எனக்கு பெருமாளை விட குருதான் முக்கியம்

20.4.2023 – வியாழக்கிழமை – வடுக நம்பி திருநட்சத்திரம்

வைணவ குருமார்களில் தலை சிறந்தவர் ஸ்ரீராமானுஜர். அவருக்கு இரண்டு விதமான செல்வங்கள் கிடைத்தன. ஒன்று அவருக்கு முன்னால் இருந்த புகழ்பெற்ற ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி போன்ற குருமார்கள். இரண்டு அவருடைய பின்னால் வந்த கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், பிள்ளை உறங்கா வில்லிதாசர் போன்ற சீடர்கள். சிலருக்கு நல்ல குருமார்கள் கிடைப்பார்கள். நல்ல சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்.

சில ஆச்சாரியார்களுக்கு நல்ல சீடர்கள் கிடைப்பார்கள். ஆனால், சரியான குரு கிடைத்திருக்க மாட்டார். ஆனால், இரண்டு செல்வங்களும் ஒரு சேரப்பெற்றவர் ராமானுஜர். அவருடைய சீடர்கள் ஒவ்வொருவரும் ரத்தினங்களாக ஜொலிப்பவர்கள். அப்படி ஜொலித்த ஒரு சீடர்தான் வடுகநம்பி. இவர் கர்நாடக தேசத்தின் மைசூரில் உள்ள சாலக்கிராமம் என்றும் ஊரில் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆந்திர பூரணர் என்று இவருக்குப் பெயர்.

இவருடைய ஆச்சாரிய பக்தி போல் வேறு ஒரு பக்தியை நாம் பார்க்க முடியாது. எதிராசவைபவம், ராமானுஜ அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்’’, “ராமானுஜ அஷ்டோத்திர சத நாம நாமாவளி’’ முதலிய நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார். ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்த வடுகநம்பி, தினமும் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வார். சரம பருவ நிஷ்டை இவருடைய நிஷ்டை என்று வைணவத்தில் இவரை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதாவது, தெய்வத்தைவிட ஒரு படி மேலாக ஆச்சாரியனை கருதுவது என்கின்ற அந்த நிலை மிக அரிது. இதற்கு பக்தியின் நிறைவு நிலை என்று சொல்வார்கள். இதற்கு உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியைச் சொல்லலாம்.

இவர், ஸ்ரீராமானுஜருக்கு திருமடைப்பள்ளி கைங்கரியம் செய்து கொண்டிருந்தார். அதாவது, ராமானுஜருக்கு தேவையான உணவினை இவர் தயார் செய்து, தன்னுடைய குருவுக்குக் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் அவர் ராமானுஜருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது, ஸ்ரீரங்கத்தில் உற்சவம் நடந்து கொண்டிருந்தது. ரங்கநாதர் கோயில் உற்சவமூர்த்தி நம்பெருமாள் வீதி உலா வந்து கொண்டிருந்தார். ஸ்ரீராமானுஜருடைய மடம் உத்தரவீதி என்று சொல்லுகின்ற வடக்கு வீதியில் உள்ளது.

உற்சவமூர்த்தி, ராமானுஜர் மடத்தின் முன் நின்றதால் மடத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் ஸ்ரீரங்கனை சேவிப்பதற்காக வெளியே வந்து நின்றார்கள். அப்பொழுது, ராமானுஜர் எல்லா சீடர்களையும் பார்த்தார். ஆனால், வடுக நம்பி மட்டும் அந்த சீடர்கள் குழாமில் இல்லாதது அவர் கவனத்திற்கு வந்தது. உற்சவமூர்த்தி அடுத்த வீதிக்குப் போய்விடுவார் என்று நினைத்துக் கொண்டு, அவரை தரிசனம் செய்ய வேண்டுமே, இந்த நேரத்தில் வடுக நம்பி உள்ளே என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்று ராமானுஜர் இங்கிருந்து குரல் கொடுத்தார். ‘‘வடுகா… வா… சீக்கிரம்… வா… நம்பெருமாள் போய்விடுவார் சீக்கிரம் வா…’’ என்று அழைத்தார்.

அப்பொழுது வடுக நம்பி நம்பெருமாள் போனால் போகட்டும். நம்பெருமாளை இப்போ நான் பார்க்க வந்தால், என்னுடைய பெருமாளுக்கான (ஸ்ரீராமானுஜருக்கான) பால் போய்விடும் என்று பதில் தந்தார். என்ன பொருள் என்று சொன்னால்,

  1. ஆச்சார்யனுக்கான பணிவிடைகளைச் செய்து விட்டால், அந்த எம்பெருமான் மகிழ்ந்து விடுவான்.
  2. நம் கடமையை தவறாது செய்தால் (நிஷ்காம்ய கர்ம யோகம்) அந்த பெருமாளே வந்துவிடுவார்.

மேற்சொன்ன இரண்டு செய்தி இதன் மூலம் சொல்லப்படுகின்றது. அவருடைய அவதார வைபவம் இன்று.

The post எனக்கு பெருமாளை விட குருதான் முக்கியம் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Thirunakshatra ,Sri Ramanuja ,
× RELATED பெருமாள் கோயிலில் நகை திருட்டு