
சென்னை: பாஜவை எதிர்த்து கர்நாடகா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிச்சமி அறிவித்துள்ளார். இதன் மூலம் அங்கு பாஜ கூட்டணி உடைந்துள்ளது. மேலும் அமித்ஷா கோரிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இது தமிழக அரசியலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. அதிமுக தற்போது 4 அணிகளாக உடைந்தாலும், எடப்பாடி பழனிசாமி அணியிடம்தான் தற்போது அதிமுக உள்ளது. பெரும்பாலான நிர்வாகிகளும் அவரிடம்தான் உள்ளனர். இந்தநிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரிப்பதாக அண்ணாமலையிடம் எடப்பாடி பழனிசாமி போனில் பேசும்போது தெரிவித்திருந்தார்.
ஆனால் திடீரென்று பன்னீர்செல்வமும் தனது அணி போட்டியிடும் என்று அறிவித்தவுடன், அண்ணாமலை தனது அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். மேலும் இழுத்தடித்து வந்தார். இது எடப்பாடி பழனிசாமியை ஆத்திரமூட்டியது. இதனால் பாஜ ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி வேட்பாளரை அறிவித்து விட்டு பிரசாரத்தை தொடங்கியதோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் எடப்பாடிக்கு சாதகமாக வந்தது. இதனால் பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கினார். எடப்பாடி அணி மட்டும் போட்டியிட்டது. பாஜவும் ஆதரவு தெரிவித்தது.
ஆனால் அப்போது முதல் தொடர்ந்து அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்தநிலையில்தான் பாஜ நிர்வாகிகளை அதிமுக இழுத்தது. இது அண்ணாமலைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்றார். இந்தநிலையில், பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜ தனித்துப் போட்டியிடும். அதிமுக கூட்டணி வேண்டாம். அவ்வாறு கூட்டணி வைத்தால், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.
இது குறித்து அதிமுக தலைமை, பாஜ மேலிடத்தில் புகார் செய்தது. இந்தநிலையில், கர்நாடகா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அங்கு, பாஜவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பாஜ கணக்குப் போட்டுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் 30 தொகுதிகளில் அதிகமாக வசிக்கின்றனர். அதில் 15 தொகுதிகளில் மெஜாரிட்டியாக உள்ளனர். அங்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் இருந்தனர். திமுக சார்பிலும் 2 பேர் எம்எல்ஏக்கள் இருந்தனர். இதனால் தனித்துப் போட்டியிட்டாலும் தமிழர்கள் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு அதிகமாக உள்ளனர். இதனால்தான் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டு அமித்ஷா பேசினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தனக்கு 3 முதல் 5 சீட் கொடுத்தால் ஆதரவு தரத்தயார் என்று கூறியுள்ளார். பாஜ கூட்டணியில் சீட் வாங்கினால், தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்கும். இரட்டை இலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பாஜவோ 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து விட்டது. அறிவிக்காத 2 தொகுதிகளில் தமிழர்கள் இல்லை. இதனால் பாஜ, அதிமுகவுக்கான கதவை மூடிவிட்டது. அதேநேரத்தில் ஆதரவை மட்டும் எதிர்பார்த்தது. இதைத் தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா மாநிலம் புலிகேசி (தனி) தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று நேற்று காலையில் அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கர்நாடகா மாநிலம் அதிமுக எடப்பாடி அணியின் அவைத்தலைவராக உள்ளார்.
இந்த தொகுதியில் பாஜ சார்பில் முரளி என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துதான் அதிமுக களத்தில் உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பாஜவை எதிர்த்து அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி தெரிவித்து விட்டார். இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் அதிமுக ஆதரவு தராததால், தமிழகத்திலும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து பாஜ தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எதிராக பாஜ மேலிட தலைவர்களும், அண்ணாமலையும் தீவிரம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த தனித்துப் போட்டியிடும் முடிவு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடகா மாநிலம் புலிகேசி (தனி) தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று நேற்று காலை எடப்பாடி அறிவித்தார்.
- இந்த தொகுதியில் பாஜ சார்பில் முரளி என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துதான் அதிமுக களத்தில் உள்ளது.
- இந்த அறிவிப்பின் மூலம் பாஜவை எதிர்த்து அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி தெரிவித்து விட்டார். இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கர்நாடகா தேர்தலில் அதிமுக தனித்து போட்டி: அமித்ஷா கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
