×

சென்னையிலிருந்து இருங்களூருக்கு தர்பூசணி பழங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

பெரம்பலூர், ஏப்.19: சென்னையிலிருந்து இருங்களூருக்கு இரண்டரை டன் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த மினி லாரி பெரம்ப லூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் அருகே நேற்றிரவு டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சாலை முழுவதும் தர்பூசணிப் பழங்கள் உடைந்து சிதறிக்கிடந்தன. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா, சமயபுரம் அருகேயுள்ள இருங்களூர், காலனித் தெருவைச் சேர்ந்தவர் சேகர் மகன் சிவராஜா (28). இவர் தனது உறவினரான திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, திருத் தியான்மலையை சேர்ந்த சிங்காரவேல் மகன் பால்ராஜ்(35) என்பவருக்குச் சொந்தமான மினி லாரியில் சென்னை மரக்காணம் என்ற பகுதியிலிருந்து இருங்களூரில் வைத்து வியாபாரம் செய்வதற்காக இரண்டரை டன் தர்பூசணிப் பழங்களை ஏற்றி வந்து கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இந்த மினி லாரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் பிரிவு ரோடு- தண்ணீர் பந்தல் இடையே வந்தபோது மினிலாரியின் இடதுபுற பின் பக்க டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த சிவராஜா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாலையில் சுமார் ஒன்றரை டன் தர்பூசணிப் பழங்கள் உடைந்து சிதறியதால் திருச்சி செல்லும் சாலையின் ஒருபகுதி முழுக்க ரத்தக்கலரில் உடைந்த தர்பூசணிப் பழங்களாகக் காணப்பட்டன.

தகவலறிந்து மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழ கன், நெடுஞ்சாலை ரோந்து ப்பிரிவு எஸ்எஸ்ஐ ஜெயரா மன் உள்ளிட்டப் போலீசார் விரைந்து வந்து தடைபட்ட சாலை போக்குவரத்தை சீரமைத்தனர். பிறகு சா லையில் கவிழ்ந்துகிடந்த மினிலாரி ரெக்கவரி மெ ஷின் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு வாகனப் போக்குவரத்து மிகமிக மந்தமாக ஊர்ந்தபடி சென்றது.

The post சென்னையிலிருந்து இருங்களூருக்கு தர்பூசணி பழங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Irangalur ,Perambalur ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...