×

கேத்தனூர் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அடுத்த ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர விசைத்தறியாளர்கள் தீவிரம்

பல்லடம்: பல்லடம் அருகே கேத்தனூரில் அமைக்கப்பட்டு வரும் விசைத்தறி பொது பயன் பாட்டு மையத்தை அடுத்த ஆண்டில் (2024) முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர விசைத்தறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. இவை வட மாநிலங்களில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்கின்றன. துணிகளை மதிப்பு கூட்டுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லாததால் வடமாநிலங்களை நம்பியே விசைத்தறியாளர்கள் உள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்ரமணியம் கூறியதாவது: விசைத்தறி தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, கடந்த 2016ம் ஆண்டு 62 விசைத்தறியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட பொதுபயன்பாட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான அறிக்கை மொத்தம் ரூ.17 கோடியே 52 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது. அதில் விசைத்தறியாளர்கள் சார்பில் ரூ. 4 கோடி 30 லட்சம், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 கோடியே 75 லட்சம், அதில் கடந்த ஆண்டே ரூ. 1 கோடியே 5லட்சத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு இயந்திரங்கள் வாங்க மானியமாக ரூ. 11 கோடியே 47 லட்சம் வழங்கவுள்ளது.

இந்த மையமானது பல்லடம் அருகே கேத்தனூரில் அமையவுள்ளது. இதில் நவீன சைசிங் மில், பாவு நூல் உற்பத்தி கூடம், நவீன விசைத்தறி பயிற்சி கூடம், டிசைனர் பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் துணியை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். வரும், 2024 ஆண்டிற்குள் பொதுபயன்பாட்டு மையத்தை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்ட மிட்டுள்ளோம். இதனால் விசைத்தறி மற்றும் அது சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கேத்தனூர் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அடுத்த ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர விசைத்தறியாளர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ketanur ,powerloom ,Palladam ,
× RELATED மழை வேண்டி பிரார்த்தனை; அரசு – வேம்புக்கு திருமணம்