×

8 வார்டுகள் பயன்பெறும்நெல்லை மாநகராட்சிக்கு முறப்பநாட்டில் இருந்து தனி குடிநீர் திட்டம்அமைச்சர் கேஎன் நேருவிடம் அப்துல்வஹாப் எம்எல்ஏ வலியுறுத்தல்

நெல்லை, ஏப். 19: நெல்லை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 8 வார்டுகளுக்கு முறப்பநாட்டில் இருந்து தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன் நேருவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். நெல்லை மாநகராட்சி 55 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் அமைந்துள்ளன. நெல்லை மாநகராட்சியில் 5.22 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நெல்லை மாநகராட்சியைப் பொருத்தவரை 15 இடங்களில் உள்ள தலைமை நீரேற்றும் நிலையங்கள் மூலம் 48 எம்எல்டி குடிநீர் பெறப்படுகிறது. இவை 72 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 91 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரிநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 எம்எல்டி குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

எனினும் பாளையங்கோட்ைட, மேலப்பாளையம் மண்டலங்களின் கிழக்கு பகுதிகளுக்கு மணப்படைவீடு மற்றும் திருமலைக்கொழுந்துபுரம் தலைமை நீரேற்றும் நிலையங்கள் தான் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த மண்டலத்தில் உள்ள 37, 38, 39, 40, 41, 51, 54, 55வது வார்டு ஆகிய பகுதிகள் நாளுக்கு நாள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக இந்த வார்டுகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே நெல்லை மாநகராட்சியின் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் முறப்பநாட்டில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பாளையங்கோட்டையில் நடந்த நகர சபா கூட்டத்தில் தொகுதி எம்எல்ஏ அப்துல்வஹாப் அறிவித்தார்.

இதன் மூலம் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலங்களில் 8 வார்டுகளுக்கு நாள்தோறும் குடிநீர் கிடைக்கும் எனவும் எம்எல்ஏ உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து முறப்பநாடு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நெல்லை மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்தது. இந்நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏவுமான அப்துல் வஹாப் சென்னை தலைமைச் செயலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, நெல்லை மாநகராட்சி 37, 38, 39, 40, 41, 51, 54, 55 ஆகிய வார்டுகளுக்கு முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனி குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கான புதிய திட்டத்தின் விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை வழங்கினார். அப்போது இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றி நெல்லை மாநகர பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி மக்களுக்கு நிறைவான அளவில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதிய குடிநீர் டேங்க்
பாளை. மண்டலம் 38, 39வது வார்டுகளுக்கு டிஆர்ஓ டேங்க் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி, சீனிவாசநகர், கவிதா நகர், தென்றல் நகர், மகாராஜநகர், வேலவர் காலனி, ஜெயந்திபுரம், ஐஓபி காலனி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளதால் 5 நாட்கள், ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முறப்பநாடு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஜெயந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாள் தோறும் குடிநீர் விநியோகம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

The post 8 வார்டுகள் பயன்பெறும்
நெல்லை மாநகராட்சிக்கு முறப்பநாட்டில் இருந்து தனி குடிநீர் திட்டம்
அமைச்சர் கேஎன் நேருவிடம் அப்துல்வஹாப் எம்எல்ஏ வலியுறுத்தல்
appeared first on Dinakaran.

Tags : Abdulwahab ,MLA ,Minister ,KN Neru ,Paddy ,Paddy Corporation ,KN Niru ,
× RELATED அப்துல்வஹாப் எம்எல்ஏ உடன் பிரசாரம்...