×

நெல்லை மாவட்டத்தில் மீட்கப்பட்ட₹18.59 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் ஒப்படைப்புஎஸ்பி சிலம்பரசன் வழங்கினார்

நெல்லை, ஏப். 19: நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து செல்போன்கள் திருடப்பட்டது குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ராஜூ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையில் 118 செல்போன்கள் மீட்கப்பட்டது. இதனை மாவட்ட எஸ்பி சிலம்பரசன், அதன் உரிமையாளர்களிடம் நேற்று காலை ஒப்படைத்தார். இந்த செல்போன்களின் மொத்த மதிப்பு ₹18 லட்சத்து 59 ஆயிரத்து 798 ஆகும். இதுகுறித்து எஸ்பி சிலம்பரசன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ உடனடியாக தங்களது சிம்கார்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அதனை தற்காலிக சேவை நிறுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அந்த சிம்கார்டுகளை குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டும்.

இதற்கென காவல்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம். மேலும் இணையதளம் வாயிலாக தவறுதலாக பணம் அனுப்பி விட்டு அதனை திருப்பி அனுப்புமாறு குறுந்தகவல்கள் வந்தால் அதை நம்ப வேண்டாம். இதன் மூலம் அதிக பணம் மோசடி செய்வதற்கான ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. பல்வேறு நிறுவனங்களில் இருந்து லோன் தருவதாக வரும் குறுஞ்செய்தி, லோன் அப்ளிக்கேசன் உள்ளிட்ட அழைப்புகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம். இணையவழி குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தங்களது புகார்களை தெரிவித்து கொள்ளலாம். அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் செயல்பாடுகள் குறித்தும், சரியான இடங்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நெல்லை மாவட்டத்தில் மீட்கப்பட்ட
₹18.59 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் ஒப்படைப்பு
எஸ்பி சிலம்பரசன் வழங்கினார்
appeared first on Dinakaran.

Tags : Nellai district ,SP ,Silambarasan ,Nellie ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் நிழற் பந்தல் மீது லாரி மோதி விபத்து!!