×

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்… அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி; 1800 பேர் படுகாயம்!!

கார்டோம்: சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவத்திற்கு இடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ கடந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்எஸ்எப்) துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ராணுவ தளபதி அப்தல் பதா அல் புர்கான் ஆர்எஸ்எப் தீவிரவாத ராணுவம் என்று கருத்து கூறியதால், அவருக்கும் துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தகாலோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் கார்டோம், ஓம்டர்மன் பகுதிகளில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே 3வது நாளாக பலத்த மோதல் நடந்து வருகிறது.ஆர்எஸ்எப் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக ஆர்எஸ்எப் அறிவித்தது. தற்போதைய சூழலில், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், நிதானமாக செயல்படவும், வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 200 பேர் கொல்லப்பட்டனர் என தெரிய வந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் என மொத்தம் 1800 பேர் காயமடைந்திருப்பதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு தெரிவித்தது. சூடானில் உள்ள 9இந்தியர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.1800 11 8797 (Toll free) +91-11-23012113; +91-11-23014104; +91-11-23017905; +91 9968291988 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் முகவரியான situationroom@mea.gov.in என்பதையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்… அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி; 1800 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Tags : civil war ,sudan ,KARDOM ,Civil War in ,
× RELATED உள்நாட்டு போர் தீவிரம் மியான்மரை...