×

குழுவின் அறிக்கை பெறப்பட்ட பின் கோயில் நிலங்களில் வசிப்பவர்களின் வாடகை கட்டணம் சீர் செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் கீழ்வேளூர் நாகை மாலி (மார்க்சிஸ்ட்), “கோயில் நிலங்களில் பல தலைமுறைகளாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கொண்டு வந்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுகின்றபோது வறுமை கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள், தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக குடியிருக்கின்ற குடியிருப்புகளை எந்த காரணம் கொண்டும் அகற்றக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரையில் அப்படி கூட்டாக, குழுவாக கோயில் இடங்களில் குடியேறியவர்களை ஒருவரை கூட அப்புறப்படுத்தவில்லை. அவர்களை முறையாக அழைத்து பேசி அவர்கள் வாடகைதாரர்களாக வருகிற பட்சத்தில் அவர்களை வாடகைதாரர்களாக சட்ட விதிகளுக்குட்பட்டு வரன்முறைப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதோடு கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அந்த நிலங்களை வாடகைதாரர்களுக்கு பட்டா செய்து கொடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையாகும். வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தவுடன் அதனடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை முறையாக இந்த அரசு எடுக்கும்.

நாகை மாலி: தமிழ்நாடு முழுவதும் கோயில் இடங்களில் பல தலைமுறைகளாக நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் விவசாய நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் சிறுகடை வைத்துள்ள பயனாளிகள் கட்ட முடியாத அளவிற்கு பத்து மடங்கு வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: இந்த கட்டணம் என்பது ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் மனைப் பிரிவுகளாக இருந்தால் அந்த மனைப் பிரிவுகளுக்குண்டான அந்த பகுதியில் இருக்கிற சந்தை மதிப்பில் 0.1 சதவீதம் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. அதே வணிகப் பிரிவாக இருந்தால் அந்த இடத்திலே இருக்கின்ற மனை பிரிவுகளுக்கு 0.3 சதவீத என்று சந்தை மதிப்பை வைத்து வாடகை நிர்ணயிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று வாடகை நிர்ணய குழுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. உறுப்பினர் சொன்னது போல் குடியிருப்பில் இருப்பவர்களிடம் எந்தவிதமான பாரபட்சத்தோடு வாடகை வசூல் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லை.

வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் தங்களால் அதிக அளவு வாடகை கொடுத்து தனியார் இடங்களில் குடியிருக்க முடியாதவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்று முதல்வர் எங்களை வலியுறுத்தியத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது. இவையெல்லாம் சீர்படுத்துவதற்கு முதல்வர் ஒரு வாடகை நிர்ணய குழுவை தலைமைச் செயலாளர் தலைமையில் உருவாக்கி இருக்கிறார். அந்த கமிட்டி பல்வேறு வகையில் சுமார் 8 மாத காலமாக முழுவதுமாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. வெகு விரைவில் வாடகை நிர்ணய குழு முடிவுகள் வந்தவுடன் இந்த வாடகை ஏற்ற, இறக்க பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் திட்டமிட்டு இருக்கிறார். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post குழுவின் அறிக்கை பெறப்பட்ட பின் கோயில் நிலங்களில் வசிப்பவர்களின் வாடகை கட்டணம் சீர் செய்யப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Chennai ,Dewalur Nagai Mali ,Marxist ,Segarbabu ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...