×

சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் –துணை ராணுவம் மோதல்; பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்வு..!!

கார்டோம்: சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே நீடிக்கும் மோதலால் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. வான்வழி தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் அங்கு பெரும் பதற்றம் நீடிக்கிறது. சூடானில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி கவிழ்த்த ராணுவ தளபதிகள், இறையாண்மை கவுன்சில் என்ற பெயரில் குழு அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்புவதற்கான முன்மொழிவின் படி ராணுவத்துடன், துணை ராணுவத்தை இணைப்பது தொடர்பாக பிரச்சனை வெடித்துள்ளது.

2 வருடங்களுக்கு துணை ராணுவத்தை இணைக்கும் பணியை முடிக்க வேண்டும் என ராணுவம் கூறிய நிலையில், இந்த நடவடிக்கையை 10 ஆண்டுகள் கழித்து செய்ய வேண்டும் என துணை ராணுவம் கூறியுள்ளது. தலைநகர் கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை, ராணுவ தலைமையகம், அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை கைப்பற்ற இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. துணை ராணுவ படையின் விமானப்படை தளங்களில் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதால் விமானங்கள் பற்றி எறியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அனைத்து ராணுவத்தலங்களை கைப்பற்றும் வரை சண்டை ஓயாது என துணை ராணுவப்படையினர் கூறியுள்ளனர். ஆனால் துணை ராணுவத்தை கலைக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ராணுவ தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இருதரப்பும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என சூடான் முன்னாள் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நாட்டை காக்க வேண்டிய ராணுவத்தினரே அதிகாரத்தை கைப்பற்ற தலைநகரில் மோதிக்கொள்வதால் கார்டோமில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இருதரப்பு தலைவர்களையும் தொடர்புகொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் சண்டையை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

The post சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் – துணை ராணுவம் மோதல்; பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sudan ,Khartoum ,
× RELATED சென்னையில் இருந்து சூடான் நாட்டிற்கு...