×

இருதரப்பு ஊர்வலத்தில் பயங்கர மோதல்: 6 பேர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் சித்திரை திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமான் திருவீதி உலா நடந்துகொண்டிருந்தது. அதேநேரத்தில், மற்றொரு பிரிவினர் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரது உருவப்படத்துடன் ஊர்வலம் சென்று கொண்டிருந்தனர். இரு தரப்பினரும் நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட போது யார் முன்னால் செல்வது என்பதில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சாலை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, பொக்லைன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இரு தரப்பை சேர்ந்த இளைஞர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மோதல் தொடர்பாக நள்ளிரவில் இரு தரப்பினரும் தனித்தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை மறியல் தொடர்ந்த நிலையில் டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

கோஷ்டி மோதலில் ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்ணு, சந்தோஷ், விக்னேஷ், பிரவீன், சந்துரு பிரகாஷ், சாய்கிரண் ஆகிய 6 பேர் மீது பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இருதரப்பு ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியதுதான் மோதலுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post இருதரப்பு ஊர்வலத்தில் பயங்கர மோதல்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chitra Thirunal ,Atthimancheripet ,Pallipattu, Tiruvallur district ,Lord Muruga ,Thiruvedi ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்