×

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி களங்கம் கற்பிக்கும் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

சென்னை: திமுக மற்றும் திமுகவினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி களங்கம் கற்பிக்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திமுக பற்றி குற்றச்சாட்டு சொல்ல போகிறார் என்றார். ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது அவர் சொல்லியிருக்கிறாரா இல்லை. அவர் சொன்ன பேட்டியை வைத்து எல்லாம் பார்க்கும் போது 1972ம் ஆண்டிலே, கலைஞர் மீது எம்ஜிஆர் கவர்னரிடத்தில் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, சட்டமன்றத்தில் வைத்து வரிக்கு வரி பதில் சொன்னார் கலைஞர். பதில் சொல்வதற்கு முன்பாக, எடுத்த எடுப்பிலே சொன்னார்.

இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். அதுபோல அண்ணாமலை கொடுத்து இருக்கிற எல்லாம் பார்க்கும் போது உள்ளபடியே பட்டிமன்றத்தை பார்ப்பது போல உள்ளது. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் இடையிடையே நகைச்சுவை செய்வார்கள். ஒரு மணி நேரம் பார்த்தால் அரை மணி நேரம் சிரிக்க கூடிய நல்ல வாய்ப்பு இருக்கும். அதேபோல தான் அண்ணாமலையின் பேட்டியை பார்த்தால் சிரிக்க தான் தோன்றுகிறது. அவரது அறியாமையை பார்த்து, இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஐபிஎஸ் தேர்ச்சி செய்தார். எப்படி அவரை போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள் என்று எல்லாம் சந்தேகம் வருகிறது.

அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்லியிருக்கும் 12 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் போதும் அவர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதி. தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். டி.வி, பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. அவர்களும் அவ்வாறே கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும்போது அண்ணாமலை யாருக்கு பூ சுற்றுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எங்கேயாவது லஞ்சம் வாங்கினார்கள். இப்படி பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை.

அண்ணாமலை எப்போதும் உண்மையை சொல்லி பழக்கம் கிடையாது. உதாரணத்திற்கு, சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செத்து போய் விட்டார் என்று சொன்னார். உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?. இதேபோல தான் அவர் சொல்கிற குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் உள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார். யார் யார் சொத்துகளையோ சேர்த்து சொல்லியிருக்கிறார். இன்றைய மதிப்பை சொல்லியிருக்கிறார். எல்ஐசி ரூ.87 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தகவல் உள்ளது. இன்றைய மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும். அதேபோல அண்ணாமலை யார், யார் பற்றி சொல்லியிருக்கிறாரோ, அவர்கள் அண்ணாமலை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்.

அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை காட்டிலும், நீதிமன்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தான் அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றால், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அவர் பதில் சொல்ல வேண்டியது இருக்கும். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களுக்கு புதியது அல்ல. எம்ஜிஆரே எங்கள் மீது குற்றச்சாட்டு சொன்னார். மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தம் என்று கையெழுத்து போட்டு கவர்னரிடம் கொடுத்தார். அந்த தியேட்டர் இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருண் ஓட்டல் என்று உள்ளது. அந்த ஓட்டல் கருணாநிதிக்கு சொந்தம் என்று கவர்னரிடம் கொடுத்தார்.

அது யாருக்கு சொந்தம் என்று எல்லாருக்கும் தெரியும். அதேபோல தான் அண்ணாமலை யார் யாருக்கோ சொந்தமானது எல்லாம் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு அழைப்பார்கள். ஏதாவது ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங்கில் ஆரம்பித்துள்ளது. ரபேல் வாட்ச் பில்லை காட்டுவேன் என்று சொன்னார். பில்லை காண்பித்தாரா, சீட்டை மட்டும் காண்பித்து மோசடி செய்துள்ளார். பில்லை காண்பிக்கவில்லை. ரசீது என்பது வேறு, சீட்டு என்பது வேறு என்பது கூட தெரியவில்லை. சீட்டிங் அண்ணாமலை இப்படி தான் சொல்லியிருக்கிறாரே தவிர, ஒவ்வொரு சொத்துக்கும் ஜீரோ… ஜீரோ…. என்று சேர்த்து இருக்கிறார். ஜெகத்ரட்சகன் மீது இவ்வளவு சொத்து இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவர் எத்தனை வருடம் தொழிற்சாலை நடத்துகிறார்.

இதை விட வேடிக்கை என்ன என்றால் இது மேல் நடவடிக்கை எடுக்கிறது எல்லாம் வருமானவரித்துறை, அமலாக்க துறை உள்ளது. அந்த துறைகள் எல்லாம் பிரதமர் மோடி கையில் உள்ளது. பதவியை பறித்து விடுவார்கள் என்று மோடியையும், நிர்மலா சீதாராமனையும் விமர்சனம் செய்கிறாரா என்று தெரியவில்லை. காரணம் அவர்களிடம் தான் துறை உள்ளது. திமுக என்பது திறந்த புத்தகம். எதை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. திமுகவை பொறுத்தவரை இதேபோல பல குற்றச்சாட்டுகளை சந்தித்து இருக்கிறோம். நான் சவால் விட்டு சொல்கிறேன். 6 முறை திமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டை சொன்னவர்கள் ஒன்றையாவது நிரூபித்து இருக்கிறார்களா, எம்ஜிஆர் கூட ஊழல் குற்றச்சாட்டை சொன்னார். ஆட்சி அதிகாரம் 10 ஆண்டுகள் அவரிடம் இருந்தது. போலீஸ் கையில் இருந்தது, விஜிலென்ஸ் கையில் இருந்தது.

ஆனால், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. ஊழல் வழக்கு போடமுடியவில்லை. நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஜெயலலிதா கலைஞர் மீது நள்ளிரவில் பாலம் ஊழல் என்று வழக்கு போட்டார். மு.க.ஸ்டாலினை கடலூர் சிறையில் கொண்டு போய் வைத்தார்கள். 10 வருடம் ஆட்சியில் இருந்தார்கள். ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா, நிரூபிக்க முடிந்ததா, நான் சவால் விட்டு கேட்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட அண்ணாமலை பெரிய அறிவுலக மேதை இல்லை. ஆளுமை திறன் மிக்கவரும் கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவாவது ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னார்கள் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், அண்ணாமலை சொத்துகளை சொல்கிறார். பெரிய வேடிக்கை என்னவென்றால் திமுக சொத்து என்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் எல்லாம் ஆருத்ராவில் டெபாசிட் செய்து விட்டு வயிற்றெரிச்சலோடு 2 நாட்களுக்கு முன்னர் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆருத்ரா ஊழலில் 2000 கோடியில் பல கோடி ரூபாயை அண்ணாமலை நேரடியாக பெற்று இருக்கிறார். 84 கோடியை நேரடியாக அண்ணாமலைக்கும், அவரது சகாக்களுக்கும் கொடுத்ததாக பொதுமக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட சொல்லி, கமலாலயத்தில் போராட்டம் நடத்தினார்கள். அகில இந்திய அளவிலும், மாநில அளிவிலும் இவர்கள் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டை திசை திருப்ப இன்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

திமுகவை பொறுத்தவரை எங்கள் மடியில் கனம் இல்லை. வழியிலேயும் பயமில்லை. அண்ணாமலை சொல்கின்ற குற்றச்சாட்டுகள், அவர் அணிந்திருக்கும் வாட்ச்க்கான பில்லை காட்டு என்றால், சீட்டை காண்பிக்கிறார். அவர் சொல்கிறார் சாப்பிடுவதை இவர் போடுகிறார் என்று சொல்கிறார். எல்லாத்தையும் மக்கள் கொடுத்து விட்டால் நீ எதுக்குயா இருக்க, ஆணாக பிறந்து வீணாக போய்ட்டியா என்று கேட்க தோணுது’’ என்று வாட்ஸ் அப்பில் கமெண்ட்கள் வருகிறது. நான் போடும் கண்ணாடி இவர் கொடுத்தது. திண்ற சாப்பாடு இவர் கொடுத்தது. போட்ட சட்டை இவர் கொடுத்தது. பேனா அவர் கொடுத்தது. அப்படி என்றால் உன்னிடம் உள்ள மூளையாவது உனக்கு சொந்தமா, இல்லையா என்று கேட்க தோணுமா, இல்லையா, நான் கேட்கவில்லை. மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

பாஜ தலைமையை கேட்டுக்கொள்வது எல்லாம் அண்ணாமலைக்கு மக்கள் புதுசாக பெயர் வைத்து இருக்கிறார்கள். அண்ணாமலை என்று சொல்லவில்லை. மட்கு மலை என்று சொல்லுங்கள் என்று. இவர் இருந்தால் தான் எங்களுக்கு நல்லது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை பாஜ தலைமையை நாங்கள் கேட்டுக் கொள்வது எல்லாம், மட்கு போல இருக்கக்கூடிய ஒருவர் இங்கே தலைவராக இருந்தால் தான், எங்களுக்கு வசதியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதாக இருக்கும். திமுகவினரை பொறுத்தவரை எதற்கும் பயந்தவர்கள் அல்ல. மக்களுக்காக பாடுபவர்கள். மு.க.ஸ்டாலின் புகழ் அகில இந்திய அளவில் இன்றைக்கு பரவி விட்டது.

அவர் அகில இந்திய தலைவர். ஒரு ஆளுநரையை கண்டித்து தீர்மானம் போடுகிற அரசிலே தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தான் வந்து இருக்கிறது. அனைவரும் பாராட்டி, இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் பின்பற்றக்கூடிய ஒருவராக உருவெடுத்துள்ளார். இந்த நேரத்தில் களங்கப்படுத்தலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அவர் எண்ணம் எந்த காலத்திலும் எடுபடாது. ஈடேறாது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் திமுக எம்பிக்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ உடனிருந்தனர்.

*‘15 நாளில் பத்திரத்தை தர வேண்டும்’
திமுகவுக்கு ரூ.1408.94 கோடி சொத்து இருக்கிறது என்கிறார். அதன் பத்திரத்தை இன்றையில் இருந்து 15 நாட்களுக்குள் எங்களிடம் தர வேண்டும். திமுக பள்ளி நடத்துகிறது என்கிறார். ரூ.3,418 கோடியில் பள்ளிக்கூடங்கள் இருக்கிறது என்கிறார். அந்த பள்ளிக்கூடங்கள் எந்த ஊரில் இருக்கிறது என்பதை பெயர் பட்டியலோடு வெளியிட்டு அதற்குரிய ஆதாரத்தை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அடுத்து திமுக கல்லூரி, பல்கலைக்கழகம் நடத்துவதாக சொல்லியிருக்கிறார்.

இதற்கான ஆதாரத்தை சொல்ல வேண்டும். 15 நாட்களில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார் என்று சொன்னால், நாடாளுமன்றம் கூட்டத் தொடர் நடக்கவே இல்லை. 10 லட்சம் கோடிக்கு அதானி ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது உலக நாடுகளே காரி துப்பும் அளவுக்கு நடந்துள்ளது. இதனை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இரு அவைகளிலும் வலியுறுத்தினார்கள். பதில் சொல்ல ஒரு நாள் கூட அவையை கூட்டவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

The post ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி களங்கம் கற்பிக்கும் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Djagam Organisation ,R. S.S. Bharati ,Chennai ,Baja ,Dizhga ,Thimuvar ,Djagagam Organisation ,
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக...