×

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 6 சிறுவர்கள் மீட்பு

பெரம்பூர்: கெல்லிஸ் கூர்நோக்கு இல்லத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இங்கு பூட்டை உடைக்கும் சத்தம் காவலாளிக்கு கேட்டுள்ளது. உடனடியாக சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி, இதுகுறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், மணலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குற்ற வழக்கு ஒன்றில் கைதான சிறுவன், இந்த சீர்திருத்த பள்ளியில் கடந்த 2ம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளான். இந்த சிறுவன் தலைமையில் 6 சிறுவர்கள் கதவை உடைத்து, தப்பியது தெரிந்தது.

அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலான தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீனா உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை கோயம்பேடு பகுதியில் வைத்து 3 சிறுவர்களை பிடித்தனர். மேலும் பட்டினப்பாக்கம் பகுதியில் வைத்து ஒரு சிறுவனை பிடித்தனர். மற்றொரு சிறுவன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தான். அவனை, அவனது பாட்டி நேற்று காலை மீண்டும் காப்பகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார். வியாசர்பாடியைச் சேர்ந்த சிறுவனையும் அவரது உறவினர்கள் காப்பகத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதன் மூலம் தப்பியோடிய 6 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சீர்திருத்தப்பள்ளி அதிகாரிகளும், தலைமைச் செயலக காலனி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

The post கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 6 சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kurnokku Home ,Perambur ,Chennai ,Kelly ,Home ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது