×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 தாரகைகளில் ரூ.51.91 லட்சம் கைவினை பொருள் விற்பனை

தஞ்சாவூர், ஏப்.13: தஞ்சாவூர் மாநகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை மதி அங்காடியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்பினை ஏற்படுத்தி தரும் வகையில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மதி அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும். வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் ஓர் இலக்குடன் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 2022ம் ஆண்டு பிப்.3ம்தேதி தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில், தஞ்சாவூர் தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை மதி அங்காடி தொடக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்று இது வரை ரூ.25.94.106க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங்களில், ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் என்ற திட்டத்தின்கீழ் தற்காலிக அங்காடி (கியாசிஸ்) அமைத்திட அனுமதி வழங்கியதை தொடர்ந்து தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்கின்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் இவ்விற்பனை அரங்கு கடந்த 8.6.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை ரூ.11,26,130 ஈட்டியுள்ளனர். மூன்றாம் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கல்லணை 2021ம் ஆண்டு சர்வதேச நீர்த்தேக்கத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் கல்லணைக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதில் பொருட்களை வாங்க ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் கல்லணையில் கடந்த 3.8.2022 அன்று தஞ்சாவூர் தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை ரூ.6,11,619க்கான மகளிர் உதவிக்குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக தஞ்சாவூர் வட்டாரம் மாரியம்மன்கோவில் ஊராட்சியில் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அருகேயுல்ள மதி அங்காடியினை பழுது நீக்கம் செய்து 7.9.2022 அன்று புதுப்பொலிவுடன் துவங்கப்பட்டது. இதில் ரூ.7,60,807,க்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. 5ம் கட்டமாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் 14.1.2023 அன்று புதிய விற்பனை மையம் தொடங்கப்பட்டது. நேற்று வரை அதில் ரூ.98,610க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்காணுமாறு 5 தஞ்சாவூர் தாரகைகள் மூலம் இதுவரை விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் மொத்த கூடுதல் தொகை ரூ.51,91,272 ஆகும். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் உயர்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும், கூடிய விரைவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார். மகளிர் திட்டம் உதவிதிட்ட அலுவலர் ஆசீர்வாதம். மேலாளர் செந்தில்குமார், தாரகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை குழு தலைவி மணிமேகலை, தாசிதார் சக்திவேல், உணவு பாதுப்பு துறை அதிகாரி சித்ரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், ஆலங்குடி ஊராட்சி பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்பு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 தாரகைகளில் ரூ.51.91 லட்சம் கைவினை பொருள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Thanjavur Corporation ,Poo Mall Mall ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...