
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நன்னிலம் காமராஜ் (அதிமுக) பேசியதாவது: தமிழகத்தில் ஏழரை லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்கப்பட்டது; நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளில் 15 லட்சத்து 20 ஆயிரம் பேரை நீக்கியுள்ளனர். திமுக ஆட்சியில் நீக்கினாலும், பின்னர் அவர்களது தகுதிகள் சரிபார்க்கப்பட்டு 1.60 லட்சம் பேருக்கு கொடுத்திருக்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: சேலம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் விண்ணப்பம் வாங்காமலேயே 20 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டிருந்தது. அதை நீக்கினோம்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: 2010ம் ஆண்டு சேலத்தில் 20 ஆயிரம் பேருக்கு விண்ணப்பம் கொடுக்காமலேயே ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார். மகன், குழந்தை, வீடு, நிலம் இருந்தால் முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்கப்படக் கூடாது. இந்த விதிகளை எல்லாம் நீக்கிவிட்டு பெற்ற பிள்ளை சோறு போடவில்லை என்றால் நான் இருக்கிறேன் என்று கூறி, 60 வயது ஒன்றே தகுதி என்று திமுக ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டது.
காமராஜ்: அதிமுக ஆட்சியில் 23 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இன்றைக்கு பட்டா வாங்குவது கனவாக இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி: கல்வி தகுதியை காரணம் காட்டி வருவாய் துறை உயர் அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுகிறார்கள்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: தாசில்தார் வரை எந்த பிரச்னையும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவு இருப்பதால் சிலருக்கு பதவி உயர்வு வழங்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும், யாரையும் பாதிக்காமல் சங்கத்தினரிடம் பேசி பிரச்னை தீர்க்கப்பட்டு வருகிறது.
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: இன்றைக்கு நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாலியல் தொடர்பான ஒரு முக்கிய பிரச்னை குறித்து இங்கு பேசினார். ஆனால் அந்த பிரச்னை தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அந்த பிரச்னைக்கு பதில் கொடுத்த முதல்வரின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை தொலைக்காட்சியில் காண்பிக்காமல் ‘கட்’ செய்கிறார்கள். இன்று மட்டுமல்ல தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
சபாநாயகர் அப்பாவு: அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இந்த பிரச்னை குறித்து என்னிடம் தெரிவித்தார். நானும் இது சம்பந்தமாக சட்டப்பேரவை செயலாளரிடம் விசாரிக்க சொல்லியுள்ளேன்.
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யாமல் புறக்கணிப்பதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.இதையடுத்து அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
The post தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் எடப்பாடி பழனிசாமி பேச்சை புறக்கணிப்பதா? அதிமுகவினர் திடீர் வெளிநடப்பு appeared first on Dinakaran.
