×

சேப்பாக்கத்தில் ராஜஸ்தானுடன் இன்று இரவு மோதல்: சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் களம் இறங்கும் டோனி; ஹாட்ரிக் வெற்றிக்கு ஆயத்தம்

சென்னை: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிககு நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன. முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே சேப்பாக்கத்தில் 2வது போட்டியில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்திலும், வான்கடேவில் 3வது போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இன்று ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் களம் இறங்குகிறது.

பேட்டிங்கில் ருதுராஜ் 3 போட்டியில் 2 அரைசதத்துடன் 189 ரன் எடுத்துள்ளார். ரகானே மும்பைக்கு எதிராக அதிரடியில் மிரட்டியதால் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வார். காயத்தில் இருந்து மீண்டுள்ள மொயின்அலி இன்று களம் இறங்குவார் என தெரிகிறது. இதனால் அம்பதிராயுடுக்கு வாய்ப்பு கிடைக்காது. மற்றபடி ஷிவம் துபே, டோனி பேட்டிங்கில் வலு சேர்ப்பர். பவுலிங்கில் தொடையில் தசைப்பிடிப்பால் அவதிப்படும் தீபக் சாகர், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்று விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மைதானத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் சிஎஸ்கே விளையாடுவது கூடுதல் பலமாகும்.

மறுபுறம் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத், டெல்லிக்கு எதிராக வெற்றி, பஞ்சாப்பிற்கு எதிராக தோல்வி என 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இன்று 3வது வெற்றியை ருசித்து முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் ஜோஸ்பட்லர், ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம் அளித்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் சாம்சன் , ஹெட்மயரை தான் பெரிதும் நம்பி உள்ளது. பவுலிங்கில் வேகத்தில் டிரெண்ட் போல்ட்டும், சுழலில் சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வினும் வலு சேர்க்கின்றனர். அஸ்வின் சொந்த ஊரில் ஆடுவதால் அவர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார். மேலும் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முருகன் அஸ்வினும் இன்று களம் இறங்க வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 15ல் சென்னை 11ல் ராஜஸ்தான் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியில் ராஜஸ்தான் 4ல் வென்றுள்ளது. கடந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஒரு போட்டியில் ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே கேப்டனாக டோனி இன்று 200வது போட்டியில் களம் இறங்க உள்ளார். சிஎஸ்கே அணியை இதுவரை அவர் 199 போட்டிகளில் வழி நடத்தி 120போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். வெற்றி சதவீதம் 60.61 ஆகும். 78 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் 213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு டோனி முதல் இடத்தில் உள்ளார். ரோகித்சர்மா 146 போட்டிகளில் மும்பைகேப்டனாக செயல்பட்டு 2வது இடத்தில் உள்ளார்.

பவர் பிளே ‘கிங்’ஸ் மோதல்
நடப்பு சீசனில் பவர் பிளேவில் சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் தான் அதிக ரன்கள் குவித்துள்ளன. ராயல்சின் பவர்பிளே (முதல் 6 ஓவர்) ரன்ரேட் 11.66 மற்றும் சராசரி ரன் 52.5. சூப்பர் கிங்ஸின் பவர்பிளே ரன் ரேட் 11 மற்றும் சராசரி ரன் 66 ஆகும். இரு பவர்பிளே கிங்ஸ் அணிகள் மோதுவதால் இன்று பவர்பிளேவில் அதிக ரன் எடுக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டோனிக்கு வெற்றியை பரிசளிப்போம்: ஜடேஜா
சிஎஸ்கே ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று பயிற்சிக்கு இடையே அளித்த பேட்டி: சேப்பாக்கம் பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், பல வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்யலாம் என்று நான் நினைக்கவில்லை. எனது வழக்கமாக ஸ்டைலில் பந்துவீசுவேன். இங்கு விளையாடிய கடைசி ஆட்டத்தில் பேட்டிங்கிற்கு மிகவும் நன்றாக இருந்தது. இரு அணிகளும் 200 ரன்களுக்கு மேல் எடுத்தன. இது வழக்கமான பிட்ச் போல் இல்லை. இன்று பிட்ச் சுழலுக்கு கைகொடுக்கும் என நினைக்கிறேன். டோனி இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான். 200வது போட்டியில் கேப்டனாக களம் இறங்கும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெற்றி பெற்று அவருக்கு வெற்றியை பரிசளிப்போம் என நம்புகிறேன், என்றார்.

The post சேப்பாக்கத்தில் ராஜஸ்தானுடன் இன்று இரவு மோதல்: சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் களம் இறங்கும் டோனி; ஹாட்ரிக் வெற்றிக்கு ஆயத்தம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Cheppakam ,Toni ,CSK ,Hadrick ,Chennai ,16th IPL ,Chennai Cheppakam Ground ,Chepaukam ,Dinakaran ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...