×

தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: சட்டப்பேரவையில் எஸ்.ஆர்.ராஜா வலியுறுத்தல்

சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: தாம்பரம் தொகுதியை உள்ளடக்கிய பேரூராட்சிகள் தற்போது மாநகராட்சியோடு இணைக்கப்பட்டிருந்தாலும், 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாம்பரம் பாதாள சாக்கடை திட்ட பணி இன்னும் முடிவடையவில்லை. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. எனவே வெகு விரைவில் தாம்பரம் தொகுதியை உள்ளடக்கிய 5 பேரூராட்சிகள் மற்றும் முடிச்சூர், அகரம் தென், திருவஞ்சேரி மற்றும் மதுரப்பாக்கம் ஆகிய 4 ஊராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: தாம்பரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் ரூ.211.15 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்படும். தாம்பரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.160.97 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கிழக்கு தாம்பரம் பகுதியில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட பணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கூடிய நிலையில் உள்ளது. தாம்பரத்தில் விடுபட்ட பகுதிகள் மற்றும் செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், சிட்லபாக்கம், பீர்க்கங்காரணை, திருநீர்மலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் வகுக்க வேண்டியுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி வரும் ஜூலை மாதம் முடிவடையும். அப்பணி முடிந்த பிறகு, நிதி திரட்டி, பணிகள் தொடங்கப்படும்.

எஸ்.ஆர்.ராஜா: தாம்பரம் பகுதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற பகுதியாக இருக்கிறது. தாம்பரம் பெரிய ஏரி, கடப்பேரி பெரிய ஏரி, சிட்லபாக்கம் பெரிய ஏரி, செம்பாக்கம் பெரிய ஏரி மற்றும் மாடப்பாக்கம் பெரிய ஏரி ஆகிய ஏரிகள் மட்டுமல்லாமல், புதுத்தாங்கல் ஏரி, வண்ணாந்தாங்கல் ஏரி, எட்டுத்தாங்கல் ஏரி, சீக்கனா ஏரி போன்ற ஏரிகள் எல்லாம் மையப் பகுதிகளில் இருக்கின்றன. இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறாததால் தற்போது சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கக்கூடிய நிலையில், அனைத்து கழிவுநீரும் அந்த ஏரிகளில் சென்று கலக்கிறது. ஆகவே, பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தொடந்து, இந்த ஏரிகளை சுத்தப்படுத்தி குடிநீர் தேவைக்க பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: தாம்பரம் மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வருவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அது ஜூலை மாதத்திலே முடியும். அது வந்த பிறகு, முதல்வரின் அனுமதியை பெற்று நிதி ஆதாரத்தை பொறுத்து இந்த ஆண்டு துவங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பாசனம் இல்லாத ஏரிகள் இருக்குமானால், அதை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு நீர்வளத் துறை அமைச்சரின் அனுமதியை பெற்று அந்த பணியையும் செய்யலாம். வண்டலூர் வரை எங்களுடைய மாநகராட்சியை விரிவுபடுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அதையும் மனதிலே வைத்திருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: சட்டப்பேரவையில் எஸ்.ஆர்.ராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,SR Raja ,Chennai ,Tambaram Constituency ,MLA ,S.R.Raja ,DMK ,
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...