×

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 189 பாஜ வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு: 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜ தலைமை வெளியிட்டுள்ளது. இதில் 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று 189 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டது. இது குறித்து கர்நாடக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 189 இடங்களுக்கு முதல் பட்டியல் தயாராகிவிட்டது.

இதில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், டாக்டர்கள் 9 பேர், 8 பெண்கள் உள்பட பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதானியில் தொகுதியில் மகேஷ்குமட்டஹள்ளி, ஷிங்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, தேவதுர்காவில் சிவண்ண கவுடா நாயக், பல்லாரி ஊரகம் ஸ்ரீராமுலு, முளாகமூரு திப்பேசாமி, ஹொன்னாளி ரேணுகாச்சார்யா, ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜேயந்திரா, சிக்கமகளூருவில் தற்போதைய எம்எல்ஏ சி.டி.ரவி போட்டியிடுகின்றனர்.

அதே போல் கோகாக் தொகுதியில் பாலியல் குற்றச்சாட்டில் அமைச்சர் பதவி இழந்த ரமேஷ்ஜார்கிஹோளிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பங்காருபேட்டை எம்.நாராயணசாமி, கோலார் வரத்தூர் பிரகாஷ், கே.ஆர்.புரத்தில் பசவராஜ், ராஜராஜேஸ்வரி நகரில் அமைச்சர் முனிரத்னா, மகாலட்சுமி லே அவுட் கோபாலையா, மல்லேஸ்வர் அஸ்வத் நாராயணா, புலிகேசிநகர் முரளி, சிவாஜி நகர் என்.சந்திரா, சாந்திநகர் சிவகுமார், ராஜாஜிநகர் சுரேஷ்குமார், சாம்ராஜ்பேட்டை பாஸ்கர்ராவ், பசவன்குடி ரவி சுப்ரமணியம், பத்மநாபநகரில் அசோக், பொம்மனஹள்ளி சதீஷ்ரெட்டி, பெங்களூரு தெற்கு கிருஷ்ணப்பா உள்ளிட்ட 189 பேர் போட்டியிடுகின்றனர்’ என்றனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு காங்கிரஸ் 166 வேட்பாளர்களையும், மஜத 93 பேரையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பாஜ தலைமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் போர்க்கொடி
    கர்நாடகாவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்று தெரிந்ததும் ஈஸ்வரப்பா, எம்எல்ஏ ரவீந்திரநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அரசியல் தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதே சமயம் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை தொடர்பு கொண்ட மேலிட தலைவர்கள், இளைஞர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ஷெட்டர், ‘ தலைமையின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படி கேட்டுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

The post கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 189 பாஜ வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு: 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka elections ,Bengaluru ,Karnataka ,state assembly ,Dinakaran ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!