×

இயேசுவின் வேலைத் திட்டத்தை விரிவாக்கிய பெண்

(மத்தேயு 15:21-28)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறையரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றித் தம் பணியைத் தொடங்கினார். (மாற்கு 1:14-15). இறையரசுப் பணி தனிநபர் செய்யும் பணி அல்ல அது மாயமந்திரத்தால் நடப்பதும் அல்ல என்பதை இயேசு நன்கு உணர்ந்திருந்தார். மாறாக அது ஒரு கூட்டுப் பணி, வெகு ஜனங்களின் ஒத்துழைப்புடன் நடக்கும் பணி. அதில் பலரது உழைப்பு, தியாகம், துன்புறுதல் மரணம் தவிர்க்க முடியாதது எனும் ஆழமான புரிதலோடு தமது பணியைத் தொடங்கினார்.

அதில் தமது சீடர்களையும் ஈடுபடுத்தினார். (மத்தேயு 10: 1-4, 16-22, மாற்கு :9:30-31) யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய பூகோளப் பிரிவுடன், கலாச்சார வேறுபாடு கொண்ட பகுதிகளில் தாம் எங்கு தமது பணியைத் தொடங்குவது என்று சிந்தித்து கலிலேயாவை அவர் தெரிந்து கொண்டார். கலிலேயா குத்தகை விவசாயிகள், கூலி விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களைக் கொண்ட பகுதி. இவர்களில் பெரும்பாலோர் கல்வி அறிவு இல்லாதவர்கள்.

மேலும், இவர்கள் நாடுகடத்தப்பட்டு திரும்பியவர்கள். ஆதலால், இனக்கலப்பு இவர்களிடையே இயல்பு. எனவே தூய்மையான யூத இனம் எனும் தகுதியை இழந்திருந்தனர். எனவே எருசலேம் வாழ் யூதர்கள் இவர்களைச் சமமாக நடத்தவில்லை. ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கலிலேயர்கள் மீது கொண்ட அனுதாபத்தினால் அல்ல. மாறாக, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலும் அவர்களிடம் இறையரசின் உயரிய தகவுகளான மனம்வருந்துதல், மன்னித்தல், ஒப்புரவாதல், இரக்கம் கொள்ளுதல், பகிர்தல், அனைவரையும் பாகுபாடின்றி ஏற்றுக்கொள்ளுதல், பெண்கள் சுதந்திரம், மற்றும் புதிய சிந்தனைகளுக்கான வரவேற்பு முதலியவை அவர்களிடம் இயல்பாகவே இருந்ததைக் கண்டு தமது பணியை அங்கு தொடங்கினார்.

தமது ஓயாத பணியின் தொடர்ச்சியாகத் தீரு சீதோன் எல்லைகள் நோக்கித் தமது சீடர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார். அப்போதுதான், கானானிய இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இயேசுவின் பயணத்தை வழிமறித்து ‘‘ஐயா, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறார்’’ என வேண்டிக்கொண்டார். இயேசு அவரிடம் தமது பணிமுன்னுரை யூத மக்களிடையே காணாமற்போன இஸ்ரவேலராகிய கலிலேய மக்களிடையே உள்ளது.

அவர்கள் அடையாளம் இழந்து சமயத் தலைவர்களால் இழிவுபடுத்தப்பட்டும், ரோம அரசாங்கத்தால் சுரண்டப்பட்டும் நசுக்கப்பட்டும் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களிடையே பணிபுரியவே தமக்கு நேரம் போதவில்லை எனத் தெரிவித்தார். அதற்கு அந்தக் கானானியப் பெண், “அய்யா உமது பணி முன்னுரிமையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம் கலிலேயரிடையே உமது பணிபோக என்போன்ற ஒடுக்கப்பட்டோருக்கும் கொஞ்சம் இடமளிக்க வேண்டும்’’ என்றார்.

இப்பெண்ணின் நம்பிக்கையைக் கண்டு இயேசு வியப்படைந்தார். அவருக்கு மறுமொழியாக ‘‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்’’ என்று கூறினார். அந்நேரமே அவர் மகளின் பிணி நீங்கிற்று. கானானியப் பெண் இயேசுவின் மீது கொண்டிருந்த அசைக்க முடியா நம்பிக்கையாலும், விடாமுயற்சியினாலும், தமது அறிவுபூர்வமான அணுகுமுறையினாலும் இயேசு கிறிஸ்துவின் நன் மதிப்பைப் பெற்று தன் மகள் நலம்பெற்று நல்வாழ்வு பெற காரணமானார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யூத இனத்திற்கு மட்டுமல்ல உலகிற்கும் அவர் மீட்பர் என்பதை உலகம் அறியச்செய்தார்.

Tags : Jesus' ,Lord ,Jesus Christ ,
× RELATED சர்ப்ப தோஷங்களை சீராக்கும் ராகு பகவான்