×

சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும் பைன்பாரஸ்ட்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள பைன்பாரஸ்ட் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. ஊட்டி – கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள இந்த பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இதனால் இந்த பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் காமராஜர் அணை கரையோரத்தில் குதிரை சவாரியும் நடத்தப்படுகிறது. பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதிகளில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புாிகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது. அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் பைக்காரா செல்லும் வழியில் அமைந்துள்ள பைன்பாரஸ்ட் பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி களைகட்டியுள்ளது. மேலும் அங்குள்ள குதிரைகளில் ஏறி காமராஜர் சாகர் அணையை ஒட்டி குதிரை சவாாி செய்து மகிழ்கின்றனர். அதிகளவிலான வாகனங்கள் வருவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Tags : Ooty ,Thalikunda ,Ooty – Kudalur road… ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...