×

செம்பட்டி அருகே 250 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய மாலை தாண்டும் பெருவிழா: மாடுகளுக்கு சிறப்பு பூஜை

நிலக்கோட்டை, ஏப்.11: செம்பட்டியை அடுத்த ஜெ.புதுக்கோட்டை அருகே 250 ஆண்டு பாரம்பரிய மாலை தாண்டும் பெருவிழா நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து, வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, ஜெ.புதுக்கோட்டை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட விவசாயிகள், மாடுகளை வழிபடும் விதமாக மாலை தாண்டும் பெருவிழாவை 250 ஆண்டுகளாக, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகின்றனர். பொம்மைய சுவாமி, மாலை தாத்தையா, ஆசிய மலைக்கோயிலில், நேற்று முன்தினம் பொங்கல் அழைப்பு, பிறந்த வீட்டு பிள்ளைகள் கொழுக்கட்டை, பழம் சிறப்பு அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரவு ராஜ கம்பளத்தார் குல வழக்கப்படி தேவதுந்துபி முழங்க, பெண்கள் மங்கல இசையுடன், தேவராட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து கோயில் வீட்டில் இருந்து, மாடுகளுக்கு, பால் பூஜை செய்து, மாலக்கோவில் வந்தடைந்தவுடன் மந்தையார்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விலவ கூடை அழைத்தல், பொதி கல்லை எடுத்தல், மாலை தாண்டுதல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட, பக்தர்கள் சட்டை அணியாமல், தலையில் தலப்பாகட்டி மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்று, மாடுகளுக்கு பரிகார சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளம் முழங்க, மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து மாலை தாண்டும் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post செம்பட்டி அருகே 250 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய மாலை தாண்டும் பெருவிழா: மாடுகளுக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Mala Thandu ,Sempatti ,Nilakottai ,J. Puthukottai ,Sembatti ,-year ,
× RELATED திண்டுக்கல்லில் பரபரப்பு!:...