×

பன்னிமடை அருகே பில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணியை குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆய்வு

கோவை, ஏப். 11: பன்னிமடை அருகே பில்லூர்-3ம் குடிநீர் திட்டத்திற்கு ரூ.134 கோடி செலவில் கட்டப்படும் மாஸ்டர் ஸ்டோரேஜ் குடிநீர் தொட்டி பணியை குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சியின் விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், பில்லூர்-3ம் குடிநீர் திட்டம் ரூ.740 கோடி செலவில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்ட பணிகளானது நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநகராட்சிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும்.

இந்த திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில மாதங்களில் கொண்டு வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இத்திட்டத்தின் கீழ் ரூ.134 கோடி செலவில் தலா 73 லட்சம் கொள்ளளவு கொண்ட மாஸ்டர் ஸ்டோரேஜ் குடிநீர் தொட்டி பன்னிமடை அருகே கட்டப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி கட்டுமான பணியை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

The post பன்னிமடை அருகே பில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணியை குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Water Supply Department ,Pannimadai ,Coimbatore ,Pillur ,Dinakaran ,
× RELATED துடியலூர் அருகே டிராக்டரில் உணவு...