×

அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தைய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

திருமயம்,ஏப்.11: அரிமளம் அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி அம்பாள்புரம் கிராமத்தில் மனோன்மணி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 2ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் மாவூர் ராமச்சந்திரன், 2ம் பரிசு கே.புதுப்பட்டி சிவராமன், 3ம் பரிசு தள்ளாம்பட்டி மங்கையர்க்கரசி, 4ம் பரிசு பரளி செல்வி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசை சேதுரப்பட்டி பாண்டி நவீன், 2ம் பரிசு மாவூர் பிரகன்யா மோகன், 3ம் பரிசு தானாவயல் வெங்கடாசலம் , 4ம் பரிசு பேராவூரணி கழனிவாசல் லிங்கேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற நெடுங்குடி – கல்லூர் சாலை இருபுறமும் திரளான மக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தைய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள் appeared first on Dinakaran.

Tags : Arimalam ,Elkai Balladiya ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்