×

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்: அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல்நாள் விசாரணை நிறைவு!

நெல்லை: விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல்நாள் விசாரணை நிறைவுபெற்றது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, சார் ஆட்சியர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் உள்ளிட்ட மற்ற காவல் நிலையங்களிலும் இதுபோன்ற புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட நெல்லை ஆட்சியர் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்று, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் விசாரணை நடைபெற்றது. அதில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். முன் ஆஜராகி புகார், வாக்குமூலம், கூடுதல் தகவல் அளிக்க விரும்பினால் நேரில் வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், முதல்நாள் விசாரணையில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. மகாலட்சுமி, எழுத்தர் வின்சென்ட் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, முதல்நாள் விசாரணை நிறைவடைந்தது.

The post விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்: அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல்நாள் விசாரணை நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Ambasamutra District Office ,Paddy ,Ambassamudram ,Ambasamudram District Office ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...