×

காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து அதிரடி 11 போலி மருத்துவர்கள் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வருவதாக எழுந்த புகாரில் மாவட்ட எஸ்.பி பா.சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் காவல் துறையினர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் சேகர் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்த சோதனையில் பேரம்பாக்கம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்கே பேட்டை, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மருத்துவம் பார்த்து வந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள்: கடம்பத்தூரில் முத்துசாமி என்பவர் டிஎன்எம்எஸ், எம்.ஏ., படித்து விட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பேரம்பாக்கத்தில் தேவராஜ் என்பவர் டிப்ளமோ இன் எலக்ட்ரோ ஹோமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.கும்மிடிப்பூண்டியில் மகேஷ் என்பவர் செல் தெரபி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கவரைப்பேட்டையில் ஞானசுந்தரி என்பவர் சித்தா படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.ஊத்துக்கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் பிஏ படித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். திருத்தணி கேஜி கண்டிகை பகுதியில் ராபர்ட் என்பவர் லேப் டெக்னீஷியன் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

திருவாலங்காடு அடுத்த வீரக்கோயில் கிராமத்தில் ரெஜினா(74). என்பவர் அவரது கணவர் கிளினிக் வைத்திருந்த அனுபவத்தை கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆர்.கே.பேட்டை அடுத்த செங்கட்டானூர் கிராமத்தில் ஞானபிரகாஷ்(35) என்பவர் பி.ஏ., எல்க்ட்ரோபதி படித்து விட்டு மருத்துவமனை வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பள்ளிப்பட்டு பகுதியில் மோகன் என்பவர் 12ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் வடிவேல் (53) என்பவர் 10ம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம்(52) என்பவர் கிளினிக் வைத்து போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரடியாக 11 பேரும் கைது செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். நள்ளிரவு வரை நீடித்த விசாரணையில் 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். காவல் துறை சார்பில் சம்மன் கொடுக்கப்பட்டு அழைக்கும் போது மருத்துவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக காவல் துறை தரப்பில் தெரிவித்தனர்.

The post காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து அதிரடி 11 போலி மருத்துவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,SP ,Ba.Sibas Kalyan ,Police Department ,Health Department ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...