×

பழநியில் அடுக்குமாடி பஸ் நிலையம் அமையுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி, ஏப். 10: பழநியில் அடுக்குமாடி பஸ் நிலையம் அமைக்கப்படுமா என பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பழநி நகரில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் பஸ் போக்குவரத்து உள்ளது.

பழநி நகரின் மையப்பகுதியில் உள்ள வஉசி பஸ் நிலையத்திற்கு நாளொன்றிற்கு 800க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தைப்பூசம், பங்குனி உத்திர காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதனால் பழநி பஸ் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். அப்போது பக்தர்கள் எந்த பஸ் நிலையத்திற்கு செல்வது என தெரியாமல் அலைந்து திரியும் சூழல் ஏற்படும். இதனை தவிர்க்க கடந்த திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு பழநி பஸ் நிலையம் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

எனினும், தைப்பூசம் போன்ற திருவிழா காலங்களில் அதிகளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் நிலையத்திற்குள் கடுமையான இடநெருக்கடி ஏற்படுகிறது. எனவே, பஸ் நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வையாபுரி குளத்தின் நீர்பிடிப்பு பகுதியையே கையகப்படுத்த வேண்டி உள்ளது. அங்கு, சுற்றுலா பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதால், பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கிடைக்குமா? என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழநி பஸ் நிலையத்தை அடுக்குமாடி (மல்டி லெவல்) பஸ் நிலையமாக மாற்றினால் கூடுதல் பஸ்கள் நிறுத்த வாய்ப்பு ஏற்படும். எனவே, பழநி பஸ் நிலையத்தை அடுக்குமாடி பஸ் நிலையமாக மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநியில் அடுக்குமாடி பஸ் நிலையம் அமையுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Palani ,Arupadai ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து