×

உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமானத்திற்கான தளவாட பொருட்களை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு கடலுக்குள் இருந்து தண்ணீரை கொண்டு வருவதற்காகவும் கழிவுகளை சுத்தரிக்கப்பட்டு திரும்ப கடலில் விடுவதற்கு ஏதுவாக கடலில் பாலம் அமைப்பதற்காக பில்லர் துாண்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் கட்டுமான பணிக்காக ஏராளமான தளவாட பொருட்கள் முந்தய அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் மழையிலும், வெயிலின் திறந்தாவளியில் கிடக்கின்றது இவற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் தலா 800 மெகாவாட் மின் உலை கொண்ட 2 மின் உலைகள் 1,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் விதமாக அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அப்பகுதியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கருக்கு மேலாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுது அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத்திட்டத்தால் விவசாயம், மற்றும் மீன்பிடி தொழில் பாதிக்கும் என கூறி பல கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் சிலர் நீதிமன்றம் வரை சென்றனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பசுமை தீர்ப்பாயம் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தடை விதித்தது.

அப்பொழுது அனல் மின் நிலையப் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிட தக்கது. ஆனால் அதனை கொஞ்ச காலத்திலேயே உச்ச நீதிமன்றம் அத்தடையை நீக்கி தீர்ப்பளித்தது. ஆனால் பொதுமக்களின் பல கட்ட போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத முந்தைய அதிமுக அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் அனல் மின் நிலையத்திற்கான பணிகள் துவங்கியது.

அனல் மின் நிலையம் அமைய உள்ள பகுதிக்கு, சென்னை, பாம்பே ,திருச்சி, பெங்களுரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய கண்டெய்லர் லாரிகள் மூலமாக இரும்பு குழாய்கள், ராடுகள் மற்றும் ஸ்டீல் தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அனல் மின் நிலையத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வருவதற்காகவும். பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் மறுசுழற்சி செய்து கடலுக்குள் கொண்டு சேர்க்கும் வகையில், ராட்சத பைப்புகள் அமைப்பதற்காக, கடலுக்குள் சுமார் 6 கி.மீ தூரம் வரை பாலம் அமைக்கும் பணி சுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தன.

இதில் சுமார் 3 கி.மீ தூரம் வரையிலும் பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், மீதி உள்ள தொலைவிற்கு கடலுக்குள் ராட்சத பில்லர் துாண்கள் அமைக்கப்பட்டடு உள்ளது. கடலுக்குள் பாலம் நீண்ட தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளதால் மீனவர்கள் இரவு நேரங்களில் மீன்பிடி தொழிக்கு செல்வதற்கே அச்சமாக உள்ளதாகவும் இந்த அனல் மின் நிலையத்தால் மீன் பிடி தொழிலுக்கு ஆபத்து என கூறி மீனவர்கள் புலம்புகின்றனர். மேலும் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான பாய்மரப்படகுகள் உள்ளே செல்வதற்கு மிகுந்து சிரமமடைகின்றன. மேலும் பாலத்தை கடந்து செல்ல வேண்டும் என்றால் பாய்மரத்தை இறக்கி விட்டு பாலத்தை கடக்க வேண்டிய சூழல் உள்ளது .

மேலும் 1600 மெகா வாட் மின் உற்பத்தி செய்வதற்காக அனல்மின் திட்டத்தின் வருவாயை விட, செலவினம் அதிகாரிப்பு மற்றும் இத்திட்டம் அமைய உள்ள உப்பூருக்கு, ரயில் மூலம் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்கள் கொண்டு செல்வதில் ஏற்படும் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உப்பூரில் பல ஆண்டுகளாக இறக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமான தளவாட பொருட்கள் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு தளவாட பொருட்கள் மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எஞ்சிய தளவாட பொருட்கள் மழையிலும் வெயிலிலும் திறந்த வெளியில் போட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மழையில் வெயிலிலும் கிடப்பதால் கட்டுமான தளவாட இரும்பு பொருட்கள் துரு பிடிக்க வாய்ப்புள்ளது அவ்வாறு துருப்பிடித்தால் அதனுடைய உறுதி தன்மை குறைந்து விடும் அதன் மூலம் அமைக்கப்படும் அனல் மின் நிலைய உலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் ஆகையால் தளவாட பொருட்களை மூடி பாதுகாக்க வேண்டும், என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமானத்திற்கான தளவாட பொருட்களை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uppur thermal power ,RS Mangalam ,Uppur ,Thermal Power Station ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு