×

பங்குனி பெருவிழாவையொட்டி சுவாமிமலை முருகன் கோயிலில் யானை விரட்டல் நிகழ்ச்சி

கும்பகோணம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை வள்ளி கல்யாணத்தின் ஒருபகுதியாக அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பெருவிழாவில் வள்ளி கல்யாணம் நடைபெறும். அதாவது, வேடர்குல அரசின் நம்பிராஜன் வளர்ப்பு மகளான வள்ளி, தினைபுனம் காவல் புரியும்போது, அவள் அழகை கண்ட நாரத முனிவர் அதனை முருகப்பெருமானிடம் கூற, வள்ளியின் அழகில் மயங்கி அவரை மணம் புரிந்திட கிழவர் வேடம் தாங்கி களைப்பாக இருப்பதாக கூறி, வள்ளியிடம் தேனும் தினைமாவும் பருகிய பின், தாகம் என கூறி அருகில் இருந்த சுனைக்கு வள்ளியை அழைத்து செல்வதும், அங்கு வள்ளியை மணம் புரிவதாக முருகப்பெருமான் கூற, கிழவரின் குறும்பில் வள்ளி கோபிப்பதும், முருகன், விநாயகரை நினைக்க, அவர் யானையாக வந்து வள்ளியை விரட்ட, மிரண்ட வள்ளி, முருகனை பயத்தில் அணைக்க, பின் முருகன் சுயரூபம் காட்டிடவுடன், நம்பிராஜன், வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுவாமிமலை அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுயரூபத்தில் காட்சி அளித்தல் நிகழ்ச்சியும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

The post பங்குனி பெருவிழாவையொட்டி சுவாமிமலை முருகன் கோயிலில் யானை விரட்டல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Swamimalai Murugan ,Panguni festival ,Valli Kalyanam ,Swamimalai ,Lord ,Muruga ,Arupadai ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா