
சென்னை: சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரயில்வே தொடர்பான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பின்னர் பேசிய பிரதமர் மோடி :
“வணக்கம் தமிழ்நாடு” என்று தமிழில் உரையை தொடங்கினார். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில் தமிழ்நாடு மகளுக்கு பயன் தர உள்ளன. தமிழ் புத்தாண்டு புதிய திட்டங்களின் தொடக்கமாக அமையும்’ என்றார். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தான். தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு கலாசார மையமாக மதுரை உள்ளது இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடும் உதவுகிறது.
மக்களின் ஒவ்வொரு ரூபாய் வரிப்பணத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்படுகிறது. குறித்த காலக்கெடுவுக்குள் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் உள்ளோம். 2014-ம் ஆண்டு 380-ஆக இருந்த மருத்துவக் கல்லூரி தற்போது 660-ஆக அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி
தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியா வளரும். தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். மலிவு விலையில் மக்களுக்கு இணையதள சேவை வழங்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் தமிழ்நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும். தற்போது துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களால் சென்னை, கோவை, மதுரை பயன்பெறும்’ என்றார்.
The post தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான்: சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
