×

தாமதமாக எழுப்பியதால் ஆத்திரம் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

திருவனந்தபுரம்: தூக்கத்திலிருந்து எழுப்ப தாமதமானதால் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கோடன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோய் (60). இவரது மகன் ரிஜோ (25). வெல்டிங் தொழில் செய்து வருகிறார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று மாலை 5 மணியளவில் வழக்கம்போல பணி முடிந்து ரிஜோ குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். தான் தூங்கப்போவதாகவும், இரவு 8.15 மணிக்கு எழுப்ப வேண்டும் என்றும் வீட்டினரிடம் கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

ஆனால் அவரை எழுப்புவதற்கு 15 நிமிடம் தாமதமாகிவிட்டது. இதனால் கோபமடைந்த ரிஜோ தாய் மற்றும் தங்கையிடம் தகராறு செய்துள்ளார். அதை ஜோய் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரிஜோ, தந்தையை பிடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கமடைந்தார். குடும்பத்தார் அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோய் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சேர்ப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரிஜோவை கைது செய்தனர்.

The post தாமதமாக எழுப்பியதால் ஆத்திரம் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala State ,Thiruchur ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் வாத்துகள், கோழிகளை கொல்ல முடிவு