×

கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஈஸ்டர் பெருவிழா‌. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வரும் 9ம்தேதி வருகிறது. ஈஸ்டருக்கு முந்தைய ஒரு வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கடைபிடிப்பர். இந்த நாட்களில் ஆடம்பர விழாக்களும், திருமணங்களும் நடத்துவதில்லை. உணவு உட்கொள்வதிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பர். அதன்படி இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி 22ம்தேதி தொடங்கியது. தொடக்க நாள் அன்று சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின் போது பயன்படுத்திய ஓலைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தம் செய்து திருப்பலியில் பங்கேற்றவர்களின் நெற்றியில் பங்கு தந்தையர்கள் சிலுவை அடையாளம் வரைந்தனர். தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் குழுவாக திருத்தலங்களுக்கு சென்று சிலுவைப்பாதையும் நடத்தினர்.

தவக்காலத்தின் இறுதி ஞாயிறான ஏப்.2-ம் தேதி குருத்து ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. புனித வாரத்தில் வரும் வியாழக்கிழமையான நேற்று புனித வியாழன் ஆக கடைப்பிடிக்கப்பட்டது. இது இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நாள் ஆகும். இயேசு கிறிஸ்து 12 சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆலயத்திலும் நேற்றைய சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தையர்கள் 12 பேரின் பாதங்களை கழுவுவார்கள்.

இன்று புனித வெள்ளியாகும். அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நற்கருணை ஆராதனை நடைபெறும். திருச்சிலுவை முத்தம் செய்யும் புனிதமான நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப்பாதை நடைபெறும்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி ஆராதனை நிகழ்ச்சி மாலை நடக்கிறது. நேற்று வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலியை தொடர்ந்து சீடர்கள் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், சீடர்களின் பாதங்களை கழுவினார். இன்று புனித வெள்ளியை முன்னிட்டு பேராலயத்தில் மாலை 5.30 மணிக்கு இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, சிலுவை பாதை மற்றும் ஏசுவின் திருவுருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். சென்னை சாந்தோம் பேராலயம், பெரம்பூர் தூய லூர்து அன்னை திருத்தலம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் இருதய ஆண்டவர், கதீட்ரல் சிஎஸ்ஐ சர்ச், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், அேசாக் நகர் மத்தியாஸ் சர்ச், திருமுல்லைவாயல் நற்கருணை தேவா லயங்களில் இன்று புனித வெள்ளி ஆராதனை நடைபெறுகிறது.
இதேபோல கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள எல்லா தேவாலயங்களிலும் இன்று புனித வெள்ளி ஆராதனை நடைபெறுகிறது. நாளை 8-ம் தேதி (சனி) இரவு 11 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு நடைபெறும். அதைத்தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடும், திருமுழுக்கு வழிபாடும், புனிதர்களின் மன்றாட்டு மாலையும், திருமுழுக்கு வாக்குறுதிகள் புதுப்பித்தலும், விசுவாசிகள் மன்றாட்டும், நற்கருணை வழிபாடும், தொடர்ந்து உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவு சிறப்பு திருப்பலியும் நடைபெறும். 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா‌ கொண்டாட்டம் நடைபெறுகிறது.

The post கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Holy Friday ,Chennai ,Christians ,Easter Festival ,Jesus Christ ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...