கூடலூர், ஏப். 7: கூடலூர் அருகே நடுவட்டம் பகுதியில் இருந்த மிகவும் பழமையான காந்திஜி நினைவு பேருந்து நிலையம் கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இடிக்கப்பட்டு இப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள பூமி பூஜை செய்து கடந்த 5 ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து புதுப்பொலிவுடன் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்திஜி நினைவாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் இரும்பு தூண்கள் மற்றும் தகரங்களால் சுமார் 100 நபர்கள் அமரும் வகையில் சிமெண்ட் இருக்கைகளுடன், ஒரே நேரத்தில்7 முதல் 8 பேருந்துகள் வரை நிறுத்தும் வகையில் இருந்தது. தற்போது புதிய பேருந்து நிலையம் வணிக வளாக கடைகளுடன் அமைந்துள்ளது.
எனினும் பொதுமக்கள், பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளது. நடுவட்டம் பகுதி வருடத்தின் 6 மாதங்கள் மிகவும் அதிக மழை பொழியும் பகுதியாகவும் அதிக குளிர் நிறைந்த பகுதியாகவும் காணப்படும். எனவே காலநிலைக்கு தகுந்தவாறு பயணிகள் அமர்ந்து காத்திருப்பதற்கு போதிய இருக்கைகளையும், மழைக்காலங்களில் பயணிகள், பொதுமக்கள் மழையில் நனையாதவாறு மேற்கூரையும் அமைக்க வேண்டும் என்றும் பேருந்து நிலையத்திற்கு மீண்டும் காந்திஜி நினைவு பேருந்து நிலையம் என்ற பெயர் சூட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகைகள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நடுவட்டம் பேருந்து நிலையத்தில் இருக்கை மற்றும் மேற்கூரை வசதி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.