×

முத்துப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வருவாய் வட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2023) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி வருவாய் வட்டங்களை சீரமைத்து முத்துப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வருவாய் வட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் கடந்த 28.2.2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டங்களை சீரமைத்து புதிய முத்துப்பேட்டை வட்டம் உருவாக்கி ஆணையிடப்பட்டது. பின்னர், புதிய முத்துப்பேட்டை வட்டத்திற்கு 2013ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தும் மற்றும் பணியிடங்கள் உருவாக்கியும் ஆணையிடப்பட்டது. ஆனால், இதுநாள்வரை முத்துப்பேட்டை புதிய வருவாய் வட்டம் செயல்படாமல் இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, முத்துப்பேட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டம் மற்றும் வட்டத்திலுள்ள பாலையூர் குறுவட்டத்திலிருந்து 15 வருவாய் கிராமங்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி வருவாய் வட்டத்திலுள்ள முத்துப்பேட்டை குறுவட்டத்திலிருந்து 18 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் 314-வது வருவாய் வட்டமாக இன்று முதல் செயல்படத் தொடங்கும்.

இதன்மூலம், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தைச் சேர்ந்த 33 வருவாய் கிராம மக்கள் தங்கள் வருவாய் துறை சார்ந்த வசதிகளை பெற இதுநாள்வரை மன்னார்குடிக்கும், திருத்துறைப்பூண்டிக்கும் சென்று வந்த நிலையில் தற்போது முத்துப்பேட்டையிலேயே வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் சலுகைகளை பெற வசதியாக அமையும். அத்துடன் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் மக்களை விரைவில் சென்று அடைவதற்கு இது ஏதுவாகவும் இருக்கும்.

The post முத்துப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வருவாய் வட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : New Revenue Circle ,Thirupupatta ,CM G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Shr.M. ,b.k. ,G.K. Stalin ,Secretariat, Revenue and Disaster ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...