×

தேசபாதுகாப்பு பெயரில் குடிமக்கள் அடிப்படை உரிமையை மறுக்க கூடாது: தனியார் டிவி மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கேரளாவில் மீடியா ஒன் என்ற செய்தி சேனலுக்கு தேச பாதுகாப்பை காரணம் காட்டி ஒன்றிய அரசு தடை விதித்தது. இந்த உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் டிவி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமாகோலி அமர்வு விசாரித்து நேற்று தடையை நீக்கி உத்தரவிட்டது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கை சுதந்திரத்தை சீர்குலைக்கும் வகையில் அரசு நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. வலுவான ஜனநாயகத்திற்கு சுதந்திரமான பத்திரிகை அவசியம்.

அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவதற்கும், குடிமக்களுக்கு கடினமான உண்மைகளை முன்வைப்பதற்கும் பத்திரிகைகளுக்கு கடமை உள்ளது. ஒரு சேனலுக்கான உரிமத்தை புதுப்பிக்காதது பேச்சு சுதந்திரத்திற்கான தடையாகும். தேசபாதுகாப்பு என்ற பெயரில் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடாது. உரிமத்தை வழங்க மறுப்பதற்கான காரணங்களை வெளியிடாமல் இருப்பதும், சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்திற்கு மட்டும் வெளிப்படுத்துவதும் இயற்கை நீதியை மீறுவதாகும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post தேசபாதுகாப்பு பெயரில் குடிமக்கள் அடிப்படை உரிமையை மறுக்க கூடாது: தனியார் டிவி மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Union government ,Kerala ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...