×

புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க தற்காலிக தடை

சேந்தமங்கலம், ஏப்.6: கொல்லிமலை அடிவாரம் புளியஞ்சோலையில் உள்ள ஆற்றில் குளிக்க தற்காலிக தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இங்கு, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. மழை காலங்களில் வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் இருந்து வெளியேறும் மழைநீர், கோவிலூர் ஆற்றில் வந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர், கொல்லிமலையின் மற்றொரு அடிவாரப் பகுதியான துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில் கலக்கிறது. இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பகுதியில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்கின்றனர்.

புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆற்றில் நாட்டாமடுவில் குளிக்கும்போது அங்குள்ள புதை மணலில் சிக்கி இறந்து விடுகின்றனர். இதுவரை அங்கு ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். கடந்த மாதம் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் மாலிக் என்பவர், தனது நண்பர்களுடன் புளியஞ்சோலை ஆற்றில் குளித்த போது புதை மணலில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனத்துறையினருடன் புளியஞ்சோலை பகுதிக்கு சென்று, அங்குள்ள ஆற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆற்றின் ஆழமான பகுதியான நாட்டா மடுவு பகுதியில் அதிக அளவு மணல் இருப்பதால், இந்த மணலில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் இறக்க நேரிடுகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இனிவரும் காலங்களில் வனத்துறை சார்பில், புளியஞ்சோலை ஆறு பகுதியில் கூடாரம் அமைத்து, வனத்துறையினர் முழு நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுற்றுலா பயணிகளை இங்கு குளிக்க கூடாது என அறிவுறுத்தப்படும். மேலும் வனப்பகுதியில் திடீரென மழை பெய்தால், வெள்ளநீர் வேகமாக புளியஞ்சோலைக்கு வரும். அதில் சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொள்ள நேரிடும். எனவே, பயணிகளின் வசதிக்காக வனத்துறையின் சார்பில், புளியஞ்சோலையில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், அங்கு குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது,’ என்றனர்.

The post புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க தற்காலிக தடை appeared first on Dinakaran.

Tags : Puliyancholai river ,Senthamangalam ,Puliancholai ,Kollimala ,Puliancholai river ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்