×

வேலூர் மாநகரில் தொரப்பாடி துப்பாக்கி சுடும் மலைப்பகுதி ஆக்கிரமிப்பை அகற்றி மேம்படுத்த வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் தொரப்பாடி துப்பாக்கி சுடும் மலைப்பகுதியின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அப்பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் காவல்துறை சட்டம் உருவான ஆண்டு 1888 ஜூன் மாதம். சிறைச்சாலை சட்டம் உருவானது 1894. அதற்கு முன்பே வேலூரில் 1830ல் மாநிலத்திலேயே முதல் சிறைச்சாலையாக வேலூர் தொரப்பாடியில் பெண்கள் சிறைச்சாலை உருவானது. தொடர்ந்து சென்னையில் 1837ல் மத்திய சிறைச்சாலை கட்டமைக்கப்பட்டது. அந்த ஆண்டு தொடங்கி 1872ம் ஆண்டு வரை அடுத்தடுத்து தமிழகத்தில் சிறைச்சாலைகள் உருவாயின. இதில் வேலூர் தொரப்பாடியில் பெண்கள் சிறைச்சாலையை ஒட்டி 1867ம் ஆண்டு உருவானதுதான் வேலூர் மத்திய ஆண்கள் சிறை.

இந்திய வரலாற்றை பொறுத்தவரை காவல்துறை, சிறைத்துறைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டதில் வேலூர் மண்ணுக்கு சிறப்பான பங்களிப்பு உண்டு. அந்த வகையில் வேலூரில் இயங்கி வரும் போலீஸ் பயிற்சிப்பள்ளியும், சிறைத்துறை நிர்வாக பயிற்சி மையமும் கூட பழமையானவையே. வேலூர் கோட்டைக்குள் இயங்கி வரும் போலீஸ் பயிற்சிப்பள்ளி பிரிட்டிஷ் காலம் தொட்டு இயங்கி வருகிறது.

அதேநேரத்தில் போலீசார் மற்றும் சிறைத்துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இப்போதைய பெண்கள் சிறைச்சாலையை ஒட்டியுள்ள அணிவகுப்பு மைதானம் மற்றும் அதன் பின்புறம் அமைந்துள்ள சிறிய மலையை சார்ந்தே அமைந்திருந்தது. அதற்கேற்ப இப்போதும் தொரப்பாடி மலைக்குன்று துப்பாக்கி சுடும் மலை என்றே கடந்த காலங்களில் அழைக்கப்பட்டு வந்தது.

இங்குதான் போலீசாருக்கும், சிறைக்காவலர்களுக்கும் துப்பாக்கியால் சுடும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும், அதன் பிறகே கணியம்பாடி அடுத்த சலமநத்தம் மலைப்பகுதிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறுகின்றனர் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள். இதற்கு அவர்கள், அப்போது தொரப்பாடி என்பது சிறிய கிராமமாகவே இருந்தது. தொரப்பாடியை தவிர்த்து 4 கி.மீ தூரத்தில்தான் அரியூர் கிராமம் அமைந்திருந்தது. இடைப்பட்ட பகுதி மக்கள் நடமாட்டமின்றி துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு எந்தவித இடைஞ்சலும் இன்றி இருந்ததால் இங்கு அந்த பயிற்சி வழங்கப்பட்டதாக காரணம் கூறுகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்ததால் தொரப்பாடி கிராமம் நகரமயமாக வளரத்தொடங்கியது. இதனால் சிறைத்துறைக்கு சொந்தமான காலியிடங்கள் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக ஒரு காலத்தில் காவல்துறை, சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த குண்டு சுடும் மலை குன்றின் ஒரு பகுதி தனியார் மருத்துவக்கல்லூரியின் கட்டுப்பாட்டில் சென்றது. மற்றொரு பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் சென்றதுடன், தற்போது எஸ்ஆர்எம் நகர் குடியிருப்புகளாக மாறியுள்ளன. மலையின் உச்சிப்பகுதியில் சமாதி வழிபாட்டு தலம் அமைந்துள்ளது.

எனவே, இம்மலையை முழுமையாக மீட்டெடுப்பதுடன், அதை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் மீட்டு மலைக்குன்றுடன் சேர்ந்த பூங்காவை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் வேலூரின் ஒரு பகுதி மக்களின் சிறந்த பொழுது போக்கு இடமாக துப்பாக்கி சுடும் மலைப்பகுதி மாறும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அத்துமீறல் நடக்கும் இடமான மலைப்பகுதி

விடுமுறை நாட்களிலும், மாலை நேரங்களிலும் காதல் ஜோடிகளும், முறையற்ற உறவு கொண்ட ஜோடிகளும் இம்மலை மீது ஏறி ஆங்காங்கே மறைவிடங்களில் ஒதுங்கி முகம் சுளிக்க வைக்கும் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதுதவிர மலையடிவார ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் நடுவே உள்ள காலியிடங்கள் திறந்தவெளி பார்களாக மாலை நேரங்களில் மாறி விடுகின்றன. இரவு நேரங்களில் இம்மலையின் இருபுறமும் செல்லும் சாலைகளில் வழிப்பறி சம்பவங்களும் அடிக்கடி நடப்பதாக தொரப்பாடி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

The post வேலூர் மாநகரில் தொரப்பாடி துப்பாக்கி சுடும் மலைப்பகுதி ஆக்கிரமிப்பை அகற்றி மேம்படுத்த வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thorapadi ,Vellore ,Torappadi ,Torapadi ,Dinakaran ,
× RELATED தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு...