×

தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு அருகே கழிவுநீர் கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம்

*தடுக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு அருகே கழிவுநீர் கால்வாயில் தூர்வாரப்பட்ட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, துப்புரவு பணியாளர்கள் சேகரித்து, திடக்கழிவு மேலாண்மை முறையில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி வருகின்றனர். மக்காத கழிவுகளாக பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்படும் மண் மற்றும் கழிவுநீர் கால்வாயில் தூர் வாரப்படும் கழிவுகள் கொட்டுவதற்கு இடமில்லாததால், குடியிருப்பு அருகே உள்ள பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வேறு இடத்தில் கழிவுநீர் கழிவுகள், கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு அருகே கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் உள்ள மண், சாலை கழிவுகளை கொட்டி உள்ளனர். இதைதொடர்ந்து, கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்பட்ட கழிவுகளை கொட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு மண், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. அதன்பிறகு கழிவுநீர் கால்வாய் கழிவுகள் கொட்டுப்பட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் காவலர் குடியிருப்பு, வேளாண் அலுவலகம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி இருப்பதால், கொட்டப்பட்ட கழிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர்.

The post தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு அருகே கழிவுநீர் கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thorappadi jail ,Vellore ,Thorappadi Jail Guard Residence ,Vellore Corporation ,Torappadi jail ,Dinakaran ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!