×

தொடர்ந்து 8 மணி நேரம் பம்பை, உடுக்கை கிராமிய பாடல் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் சாதனை

ஆனைமலை : அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்க,ஆனைமலை அருகே தொடர்ந்து 8 மணி நேரம் பம்பை, உடுக்கை இசை முழங்கி கலைஞர்கள் நோபல் உலக சாதனை படைத்தனர்.நவராத்திரியையொட்டியும், அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கவும், பொள்ளாச்சியை அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள மகுடேஸ்வரி கோவிலில் பம்பை மற்றும் உடுக்கை கலைஞர்களின் 8 மணி நேரம் தொடர்ந்து பம்பை, உடுக்கை நாட்டுப்புறப்பாடல் பாடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 26 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு கருப்புசாமி, சிவன், பார்வதி வேடமிட்டு தொடர்ந்து இடைவிடாது 8 மணி நேரம் நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நோபல் உலக சாதனையில் ஈடுபட்டனர். நோபல் உலக சாதனை புத்தகம் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜன் கலந்து கொண்டு கண்காணித்து வந்தார். தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாது நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கை இசைத்து  நோபல் நிறுவனம் புத்தகத்தில் இடம் பெற்றனர். மேலும் இந்த சாதனையில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அப்போது சிவன், பார்வதி, கருப்பராயன் போன்று கடவுள்களின் வேடமணிந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் பம்பை உடுக்கை இசைக்கு ஏற்றவாறு ஆக்ரோஷத்துடன் நடமாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கவும், வறுமையில் வாடும் பம்பை, உடுக்கை கலைஞர்களை ஊக்குவிக்கும் நோபல் உலக சாதனைக்காகவும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா காலத்தில் நல வாரியத்தில் உள்ள கலைஞர்களுக்கு மட்டும்  நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனால் ஆயிரக்கணக்கான கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே அரசு அனைத்து கலைஞர்களையும் நல வாரியத்தில் இணைத்து  நிவாரண தொகை வழங்கி, அழிந்து வரும் கலையை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டுமென்று நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்….

The post தொடர்ந்து 8 மணி நேரம் பம்பை, உடுக்கை கிராமிய பாடல் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் சாதனை appeared first on Dinakaran.

Tags : Anaimalai ,Pampai ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...