×

மசினகுடி வனப்பகுதியில் வனத்துறையினர் கண்ணில் சிக்காத புலி: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் தொய்வு

கூடலூர்: மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற புலியை தேடும் பணி நேற்று 13ம் நாளாக தொடர்ந்தது. ஆனால் வனத்துறையினரின் கண்களுக்கு புலி சிக்காததால் மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீலகிரி  மாவட்டம் மசினகுடி பகுதிகளில் 4 பேரை டி23 என்ற புலி தாக்கி கொன்றது. இந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர், அதிரடிப் படையினர், தொண்டு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 12 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் புலி இன்னமும் சிக்கவில்லை. சில முறை கண்களில் தென்பட்டது. ஆனால் அப்போது மயக்க ஊசி செலுத்த முடியாததால் புலியை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று 13வது நாளாக புலியை பிடிக்கும் பணி நடந்தது. ஆனால் புலி வனத்துறையினரின் கண்களில் சிக்கவில்லை. இதனால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 3 நாட்களாக வனத்துறையினரின் கண்களுக்கு புலியின் நடமாட்டம் தென்படவில்லை. ஆனால், சிங்காரா வனப்பகுதியை தாண்டி புலி வேறு எங்கும் செல்லவில்லை என தெரிகிறது. சிங்காரா வனப்பகுதியை ஒட்டிய மன்றாடியார் மற்றும் சிமெண்ட் பாலம் பகுதிகளில் 2 புலிகளின் கால் தடங்களை சேகரித்து உள்ளோம். அவை சம்பந்தப்பட்ட புலியின் கால் தடமா? என்பதை ஆய்வு செய்து வருகிறோம். புலியை கண்காணிக்க பரண்கள் அமைக்கப்பட்ட பகுதிகளுக்கு புலி இதுவரை வரவில்லை. அப்பகுதியில்,  கட்டப்பட்டுள்ள மாடுகளும் தாக்கப்படவில்லை. ஆனால், இந்த புலிக்கு கடந்த 3 நாட்களாக உணவு ஏதும்  கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. இப்பகுதிகளில் ஏற்கனவே 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிங்காரா வனப்பகுதியை ஒட்டிய அனைத்து வனப்பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், கேரளாவில் இருந்து வந்துள்ள வனத்துறையினரும் நேற்று முதல் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி விரைவில் பிடிபடும்.  இவ்வாறு அவர் கூறினார். …

The post மசினகுடி வனப்பகுதியில் வனத்துறையினர் கண்ணில் சிக்காத புலி: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் தொய்வு appeared first on Dinakaran.

Tags : Mazinagudi ,Cuddalore ,Mashinagudi Wilderness ,Dinakaran ,
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ...