×

கணக்கெடுப்பு பணி ஆய்வின்போது இடைநின்ற 5 மாணவர்களுக்கு அரசு பள்ளியில் சேர அனுமதி-மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்

விராலிமலை : அன்னவாசலில் பூம்பூம் மாட்டுக்கார குடும்பங்களை சேர்ந்த பள்ளி செல்லாத வீட்டில் இருந்த 5 மாணவர்களுக்கு அரசு பள்ளியில் சேருவதற்க அதே இடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்திமூர்த்தி அட்மிஷன் வழங்கி விலையில்லா சீருடைகளை வழங்கினார்.புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இலுப்பூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் காமராஜ் நகர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்வி உதவித்தொகை பெற முடியாமலும், அரசுப்பணிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் இதனால் கல்வி கற்று எந்த பயனும் இல்லை என வேதனையுடன் கூறினர். இதனை பொறுமையாக கேட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட கலெக்டரிடம் கூறி சாதிச் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார். பின்னர் அப்பகுதியில் 9ம் வகுப்பு மாணவி ஒருவர், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர், 6ம் வகுப்பு மாணவி ஒருவர் என பள்ளி செல்லாமல் இருந்த 5 பேரை உடனடியாக வடசேரிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரை வரவழைத்து அதே இடத்தில் அட்மிஷன் வழங்கினார். பின்னர் அக்குழந்தைகளுக்கு சீருடைகள், விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கினார். அதேபோல் ரித்திஷ் என்ற மாணவனை ரெங்கம்மாள்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியரை வரவழைத்து முதல் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் அம்மாணவனுக்கும் விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள் வழங்கினார். பின்னர் அப்பகுதி மக்களிடம் கல்வி மட்டுமே தங்கள் வாழ்வு நிலையில் முன்னேற்றம் அடைய உதவும் என்றும், கல்வி மட்டுமே அழிக்க முடியாத சொத்து என்றும் தங்கள் பகுதி குழந்தைகளை இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பெற்றோர்களிடம் வணங்கி கேட்டுக் கொண்டார்….

The post கணக்கெடுப்பு பணி ஆய்வின்போது இடைநின்ற 5 மாணவர்களுக்கு அரசு பள்ளியில் சேர அனுமதி-மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : District Primary Education ,Officer ,Viralimalai ,Anvasal ,Boompoom ,District Primary Education Officer ,
× RELATED தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிப்பு