×

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: உள்ளூர் வாசிகளை மிரட்டும் போலீசார்… மிரளும் மக்கள்!: கடும் கெடுபிடியால் பாதிப்பு

உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் தசரா விழாவை முன்னிட்டு  போலீசாரின் கெடு பிடியால் உள்ளூர் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கொடியேற்றம், சூரசம்ஹாரம், வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. தற்போது தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் யாரும் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் நுழைந்து விடாத வகையில் ஊரை சுற்றிலும் பேரி கார்டுகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளூர்க்காரர்களையும் போலீசார் அனுமதிக்காமல் புரட்டி எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள், உள்ளூர்க்காரர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.குலசேகரன்பட்டினம் ஊரின் நீளம் சுமார் 4 கிமீ சுற்றளவு கொண்டது. வெளியூரிலிருந்து பஸ்சில் வருபவர்கள் இறங்குவதற்கு ஒரே ஒரு பஸ் நிறுத்தம் மட்டுமே ஊருக்கு மத்தியில் உள்ள பைபாஸ் சாலை பெரிய பாலம் அருகில் அமைத்துள்ளனர். அதனால் ஊர்க்காரர்கள் அங்கு இறங்கி 2 கிமீ தூரம் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆட்டோவில் வரலாமென்றால் அதுவும் கூடாதாம். ஒவ்வொரு சந்தியிலும் பேரி கார்டு வைத்து நடந்து வருபவர்களை தவிர வேறு யாரும் உள்ளே வரக் கூடாது என தடுக்கிறார்கள். இரு சக்கர வாகனத்தில் சென்றாலும் மறிப்பதுடன்,  உள்ளூர்க்காரர்கள் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கப் போனாலும் தடுக்கிறார்கள். இதன் காரணமாக அவசர மருத்துவ உதவிக்கு முதியவர்கள் வெளியே சென்று வரவும் முடியாத நிலை உள்ளது. இதனால் உள்ளூர மக்கள் எங்கும் செல்ல முடியாமல் கடுமையாக திணறி வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டால் போலீசார் பொதுமக்களுக்கு அர்ச்சனை செய்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.   மேலும் குலசேகரன்பட்டினம் பகுதியிலே தற்காலிக கடைகள், நடமாடும் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரையும் விரட்டியடித்து வருவதால் ஏராளமான கூலித் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு  அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. போலீசாரின் இந்த கெடுபிடி காரணமாக பக்தர்கள், உள்ளூர்க்காரர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு உள்ளூர்க்காரர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.”ஏன் இந்த கடுமை?” போலீசார் குலசேகரன்பட்டினம் ஊரை சுற்றி மட்டுமல்ல அம்மன் கோவிலை சுற்றிலும் பேரி கார்டுகளும், தகர சீட்டுகளும் கொண்டு மறைத்து வைத்துள்ளனர். இதில் செய்தி சேகரிக்க செல்லும்  பத்திரிகையாளர்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்கின்றனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறியுள்ள நிலையில், உள்ளூர் மக்களை  அடிப்படை வசதிகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் வாட்டி வதைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.”அகதிகள் போன்று நடத்தும் கொடுமை”திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும்போது அண்ணா நகர், அண்ணா சிலை, பெருமாள் கோயில் பஸ் ஸ்டாப், டிரெய்னிங் ஸ்கூல் பஸ் ஸ்டாப்,  பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் ஆகிய 6 பஸ் ஸ்டாப்கள் உள்ளது. தற்போது பஸ்களை குலசை – மணப்பாடு பைபாஸ் சாலையில் திருப்பி விட்டுள்ள போலீசார் போலீஸ் ஸ்டேஷன் சமீபத்தில் உள்ள பைபாஸ் பாலம் அருகே மட்டுமே பஸ்களை ஏற்றி, இறக்கி நிறுத்த அனுமதிக்கின்றனர். குலசேகரன்பட்டினத்தை பொறுத்தவரை மக்கள் தொகை அதிகம் கொண்ட கிராமம். இந்த ஊர் மக்கள் அவசர தேவைக்கு காய்கறி, மளிகை, ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகள் போன்ற எந்த தேவைக்கும் உடன்குடி, திருச்செந்தூர் தான் செல்ல வேண்டும். அப்படி இருக்கும் போது வெளியூர் செல்லும் உள்ளூர்  மக்கள் ஊருக்கு மத்தியில் 2 கி.மீ., தூரத்தில் உள்ள ஒரே பஸ் ஸ்டாப்பில் தான் ஏறி, இறங்க வேண்டும் என்று போலீசார் நிர்ப்பந்திக்கின்றனர். இது உள்ளூர் மக்களின் மனித உரிமையை பாதிப்பது போல் உள்ளது. இதனால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். கொரோனாவை காரணம் காட்டி திருவிழாவிற்கு மட்டுமே தடை விதித்துள்ள நிலையில், உள்ளூர் மக்களை போர் நடக்கும் பகுதியில் வைத்துள்ள அகதிகள் போன்று போலீசார் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது….

The post குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: உள்ளூர் வாசிகளை மிரட்டும் போலீசார்… மிரளும் மக்கள்!: கடும் கெடுபிடியால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpatnam Dasara Festival ,Udunkudi ,Mutharamman Dasara Festival ,Kulasekaranpattinam ,Kulasekaranpatnam ,Dinakaran ,
× RELATED குலசேகரன்பட்டினம் தசரா பண்டிகை: ரூ.47.55 லட்சம் உண்டியல் காணிக்கை..!