×

‘வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் சுணக்கமோ சுணக்கம்’ போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் சென்னை பெருநகர வாகன ஓட்டிகள்

* சிக்னலில் போலீசார் இல்லாததால் பணிக்கு செல்வோர் கடும் அவதி * செயலிழந்து போன ‘ஜிசிடிபி சிட்டிசன் சர்வீஸ்’ திட்டம்சென்னை: சென்னையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால், ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகின்றனர். அதேநேரம் சிக்னல்களில் போக்குவரத்து போலீசாரும் பணியில் இல்லாததால் வெகுநேரம், நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்துக்கிடக்கும் சூழலால், மருத்துவமனை, உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத அவல நிலை உருவாகி உள்ளது.சென்னையில் கொரோனா முழு ஊரடங்கிற்கு பிறகு கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள் என அனைத்தும் தமிழக அரசு வழிகாட்டுதல்களின்படி திறக்கப்பட்டுள்ளன. இதனால், சென்னையில் தற்போது பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையின் இயல்பு வாழ்க்கை கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால், மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சென்னையில் மாநகர பேருந்து சேவை முழுமையாக இயக்கப்படுகிறது. அதேபோல் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளும் வழக்கம்போல் இயங்குகிறது. இதனால், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தங்கியிருந்தவர்கள் மீண்டும் பணி, தொழில் நிமித்தமாக வழக்கம் போல் சென்னைக்கு அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். இதனால், தினசரி சென்னைக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், மாநகர காவல் எல்லையில் உள்ள போக்குவரத்து போலீசார் கொரோனாவுக்கு பிறகு இன்னும் முழுமையான பணியில் ஈடுபடாமலும், பெரும்பாலான சிக்னல்களில் நின்று பணி செய்யாமல் இருக்கும் காட்சி தான் அதிகமாக காணப்படுகிறது. அப்படியே பணியில் இருந்தாலும், இருக்கையை விட்டு போலீசார் வாகனங்களை முறைப்படுத்தும் பணியில் ஈடுபடுவதில்லை. உதாரணமாக, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, வடபழனி-போரூர் சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி என முக்கிய சாலை சந்திப்புகளில் தானியங்கி சிக்னல்கள் மட்டும் இயங்கி வருகிறது. ஆனால், போக்குவரத்து போலீசாரை பார்க்க முடிவதில்லை. குறிப்பாக, கொரோனா முழு ஊரடங்கிற்கு பிறகு அவர்களின் பணியில் ெபரிய அளவில் சுணக்கத்தை பார்க்க முடிகிறது. மேலும், சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். பொதுவாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதனால் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு கடை மூடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் கடைகள் அருகே மதுபாட்டில்கள் வாங்க வருபவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகள், வேளச்சேரி நெடுஞ்சாலை, தி.நகர், கிண்டி, கொளத்தூர் அண்ணா சிலை பேருந்து நிறுத்தம், கோவிலம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதிகளில் கடை திறப்பதற்கு முன்பும், கடை மூடுவதற்கு முன்பும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை அங்கு பணியில் உள்ள போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவிக்கு வந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதை விட்டுவிட்டு மேம்பாலம் உட்பட சாலையின் மறைவான இடங்களில் வாகன ஓட்டிகளை வழிமறித்து ஹெல்மெட் போடவில்லை, மாஸ்க் போடவில்லை என்று கூறி வழக்கு பதிவு செய்து அபராதம் விதிப்பதில் மட்டும் போக்குவரத்து போலீசார் ‘கறார்’ காட்டுகின்றனர். அப்படியே ஈடுபட்டாலும் சாலையில் விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. கனரக வாகனங்கள் மாநகரத்திற்குள் சர்வ சாதாரணமாக சுற்றி வருகிறது. இதை எந்த போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. ஒரு இடத்தில் சம்பந்தப்பட்ட கனரக வாகன ஓட்டுனருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் ரசீதை வைத்துக்கொண்டு சென்னை முழுவதும் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்கள் சுற்றி வருகின்றன. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு காவல் துறைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார். போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வரும் பழைய வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரோந்து பணியில் ஈடுபட அதி நவீன வசதிகளுடன் கூடிய பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்தும் இருந்தும் போக்குவரத்து போலீசாரை உயர் அதிகாரிகள் முறையாக பணி செய்ய வலியுறுத்தாமல் இருப்பதே சென்னை பெருநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுதவிர சென்னை மாநகர காவல்துறையில் ‘ஜிசிடிபி சிட்டிசன் சர்வீஸ்’ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் சாலையோரம் யாரும் உரிமை கோராமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்கள் குறித்து, பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து தகவல்கள் அனுப்பும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் உரிமை கோராமல் பல நாட்கள் கிடக்கும் வாகனங்கள் குறித்து புகைப்படத்துடன் செயலியில் தகவல்கள் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.* லென்சில் பார்த்தாலும் 258 சிக்னலில் போலீஸ் இல்லைசென்னையில் 1,700 முக்கிய சந்திப்புகள் (ஜங்ஷன்) உள்ளன. மாநகர போக்குவரத்து போலீசார் கட்டுப்பாட்டில் 408 சிக்னல்கள் இருக்கின்றன. அதில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஈவெரா நெடுஞ்சாலைகளில் உள்ள சிக்னல்கள் என மொத்தம் 150 சிக்னல்களில் மட்டும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடிகிறது. மற்ற சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவதை பார்க்க முடியவில்லை.* வரிசையாக வரும் பண்டிகைகள்தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வரிசையாக வருவதால் வழக்கத்தை விட தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் துணிகள் மற்றும் பொருட்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் திட்டமிட்டு பணியில் முழுமையாக ஈடுபட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஒழுங்குபடுத்த உயர் அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.* போக்குவரத்து சிஸ்டத்தை சிதைக்கும் ஆட்டோக்கள்சென்னையின் சாபக்கேடுகளில் ஒன்றாக ஆட்டோக்கள் மாறிப்போனது. ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் செய்யும் தவறுகளால் விபத்து, போக்குவரத்து நெரிசல் என ஒட்டு மொத்த ஆட்டோ டிரைவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. கார்,டூவீலர் போன்று ஆட்டோக்களுக்கு பார்க்கிங் பெரிய அளவில் சென்னையில் இல்லை. எனவே, மக்கள் எங்கே அதிகம் கூடுகிறார்களோ அல்லது மக்கள் அதிகம் வந்து செல்கிறார்களோ அங்கேயே ‘செல்ப்’ ஆட்டோ ஸ்டாண்ைட உருவாக்கி விடுகிறார்கள். இதேபோல தான் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் முன்பு ஆட்டோக்கள் அதிகளவில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக  நிறுத்தப்பட்டுள்ளன. இதை பார்க்கும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல், சிக்னலில் தங்கள் பணியை கவனிக்கிறார்கள். காரணம், போக்குவரத்துக்கு இடைஞ்சல் தரும் ஆட்டோ ஓட்டுனர்கள், போக்குவரத்து போலீசாரை கவனித்துவிடுவது வாடிக்கையாக மாறிவிட்டது. இதுவே போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள், சிக்னல்கள் அருகிலேயே ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுகின்றனர். இதனால் வாகனங்கள் திரும்ப முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சிக்னல்கள் முடங்கி  விடுகின்றன. மயிலாப்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், திருவான்மியூர்,  நீலாங்கரை, அடையாறு, தரமணி, எழும்பூர், கிண்டி, அண்ணாநகர், அமைந்தகரை,  சூளைமேடு பகுதிகளில் உள்ள சாலையில் வாகனங்கள் விரைவாக செல்ல முடியாமல் மெதுவாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பாக ‘பீக் அவர்’ நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். ஆட்டோக்களால் ஒட்டுமொத்த சென்னையின் போக்குவரத்து சிஸ்டம் சிதைந்து போய் உள்ளது. இவற்றை சரிபடுத்த வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.* தொல்லை தரும் கொரோனா கடைகள்கொரோனா காலத்தில் சாலையோரம் கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டன. காரணம், ஓட்டல்கள் மற்றும் மெஸ்கள், நட்சத்திர விடுதிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர், ஒரு தெருவுக்கு 2 முதல் 3 கடைகளை சாலையோர உணவு கடைகளை திறந்துள்ளனர். அந்த கடைகள் அனைத்தும் தற்போது இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி சாப்பிட்டு செல்கின்றனர். இதனாலும் ஏற்கனவே உள்ள போக்குவரத்து நெரிசலுடன் கூடுதலாக சரளமான போக்குவரத்தில் பாதிப்பை அதிகரிக்க செய்துள்ளது. …

The post ‘வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் சுணக்கமோ சுணக்கம்’ போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் சென்னை பெருநகர வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,GCTP Citizen Service ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...