×

தோட்டத்தில் புதைக்க மக்கள் எதிர்ப்பு: உயிரிழந்த குட்டி யானையை துண்டு, துண்டாக வெட்டி எடுத்து தூக்கிச்சென்ற வனத்துறையினர்

பந்தலூர்: பந்தலூர் அருகே சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையின் உடலை தோட்டத்தில் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் அதனை துண்டு, துண்டாக வெட்டி வனப்பகுதிக்கு தூக்கி சென்று புதைத்தனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் மழவன் சேரம்பாடி பகுதியில் தனியார் பாக்கு தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் சேற்றில் சிக்கி குட்டி யானை ஒன்று இறந்தது. இறந்த குட்டியை பிரிந்து செல்லாமல் தாய் யானை மற்றும் 3 யானைகள் குட்டியின் சடலத்தின் அருகிலேயே முகாமிட்டிருந்தன. சடலத்தில் இருந்து துர்நாற்றம் வந்த பின்னர் நேற்று முன்தினம் காலை தாய் யானை மற்றும் பிற யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன.இந்நிலையில் நேற்று சேரம்பாடி ரேஞ்சர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையில் கால்நடை மருத்துவர் டேவிட் மோகன் மற்றும் வனத்துறையினர் இறந்த குட்டி யானையை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்தனர். பின்னர் இறந்த யானை உடலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அங்கு புதைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானையின் உடலை தலை, கால் என துண்டு, துண்டாக வெட்டி எடுத்தனர்.பின்னர் அவற்றை மூங்கில் கொம்புகளில் கட்டி, தோளில் சுமந்து அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்து சென்று புதைத்தனர். 1500 கிலோ எடை கொண்ட யானையை துண்டு, துண்டாக வெட்டி வனத்துறையினர் தோளில் சுமந்து சென்று புதைத்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த குட்டி யானை 4 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், சேற்றில் சிக்கி எழுந்திருக்க முடியாமல் இறந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post தோட்டத்தில் புதைக்க மக்கள் எதிர்ப்பு: உயிரிழந்த குட்டி யானையை துண்டு, துண்டாக வெட்டி எடுத்து தூக்கிச்சென்ற வனத்துறையினர் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Dinakaran ,
× RELATED கொளப்பள்ளி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்