×

தேசிய மாணவர் படை ‘பி’ சான்றிதழ் எழுத்து தேர்வு குமரியில் இன்று 440 பேர் எழுதுகின்றனர்


நாகர்கோவில், மார்ச் 26: நாகர்கோவிலில் இன்று நடைபெறுகின்ற தேசிய மாணவர் படை ‘பி’ சான்றிதழ் எழுத்து தேர்வில் குமரி மாவட்டத்தில் 440 பேர் எழுதுகின்றனர். தேசிய மாணவர் படையில் ஆண்டு தோறும் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் தேர்வும், கல்லூரி மாணவர்களுக்கு ‘பி’ மற்றும் ‘சி’ சான்றிதழ் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ‘பி’ சான்றிதழ் தேர்வு இன்று (26ம் தேதி) நடக்கிறது. குமரி மாவட்டத்தில் 23 கல்லூரிகளை சேர்ந்த 440 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுத உள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 145 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு 355 மதிப்பெண்கள் ஆகும்.

எழுத்து தேர்வையொட்டி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த செய்முறை தேர்வில் மாணவர்கள் கலந்துகொண்டு அணிவகுப்பு, வரைபடத்தில் இடம் கண்டறிதல், துப்பாக்கி குறிபார்த்து சுடுதல், துப்பாக்கி பாகங்களை கழற்றி திரும்ப பொருத்துதல், துப்பாக்கி கையாளுதல் உள்ளிட்டவை தொடர்பாக செயல்பாடுகளை நிகழ்த்தினர்.  ‘பி’ சான்றிதழ் பெறுகின்றவர்கள் ‘சி’ சான்றிதழ் தேர்வை எழுதலாம். அதில் வெற்றிபெற்றால் ராணுவம், துணை ராணுவ பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

Tags : National Student Corps ,Kumari ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!