×

மதுரை தோப்பூரில் இயற்கை தவழும் பசுமை சூழலில் காச நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையம்: புற்றுநோயாளிகள், ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிறப்பு வசதிகள்

மதுரை, மார்ச் 24: இன்று (மார்ச் 24) உலக காசநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் காசநோய் இறப்பில்லா சிறப்பு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மற்றும் தொற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை, பல்வேறு நவீன வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன் செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் காசநோய் பாதித்து மருந்துக்கு கட்டுப்படாத மற்றும் நோய் முற்றியவர்களுக்கு ஒருங்கிணைந்த பன்மருந்து எதிர்ப்பு காசநோய் நவீன சிகிச்சை மையம் இயங்குகிறது. இங்கு, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காசநோய் (எலும்புருக்கி நோய்) என்பது டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காசநோய் பொதுவாக நுரையீரலை தாக்குகிறது. இது நுரையீரல் காசோநாயாக வகைப்படுத்தப்படுகிறது. இதுதவிர மூளை, சிறுநீரகம், தண்டுவடம் போன்றவற்றையும் இந்நோய் பாதிக்கிறது. குறிப்பாக இரு வாரங்களுக்கும் மேலாக தொடர் இருமல் இருத்தல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், உடல் எடை குறைதல், பசியின்மை, மாலையில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் இரவில் வியர்ப்பது உள்ளிட்டவை காசநோய் அறிகுறிகளாகும். நுரையீரல் காசநோயாளிகளின் இருமல் மற்றும் தும்மலில் இருந்து காற்று மூலமாக கிருமிகள் மற்றவர்களுக்கு பரவுகிறது.

இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதன் மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவலை தடுக்கலாம். நுரையீரல் அல்லாத பிற உறுப்புகளில் ஏற்படும் காசநோய் பாதித்தவர்களிடம் இருந்து பிறருக்கு நோய் பரவுவதில்லை. காசநோய் பாதித்தவர்களிடம் நெருங்கிய தொடர்புடையவர்கள், புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பழக்கம் உள்ளவர்கள், எச்ஐவி நோய்த்தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு நோயாளிகள், குவாரிகளில் வேலை செய்பவர்கள், நோய் தடுப்பு மருந்துகள் அதிகம் உட்கொள்பவர்கள் போன்றவர்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. குடும்பத்தில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. சரியான சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து உணவு மூலம் எளிதாக குணமடையலாம்.

தற்போது ‘நாட்’ எனும் நவீன பரிசோதனை மூலம் காசநோயை எளிதாக கண்டறியலாம். இதன் சிறப்பம்சமாக மருந்துகளால் இந்நோயை கட்டுப்படுத்த முடிகிறதா என்பதையும் அறியலாம். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை குறித்த காலத்திற்கு எடுப்பதன் மூலம் காசநோயை முற்றிலும் குணப்படுத்தலாம். மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கான பிரத்யேக சிறப்பு வார்டில் 219 படுக்கைகள் உள்ளன. இதில் அதிநவீன உயிர்காக்கும் சிறப்பு ஐசியூ பிரிவில் 12 படுக்கை உள்ளது. கடந்தாண்டு 1500 காசநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்துள்ளனர். இதில் 1200 ஆண்கள், 300 பெண்கள்.

இந்த மருத்துவமனையில் கூடுதல் சிறப்பு மருத்துவ சேவை வசதியாக, மரண விளிம்பில் உள்ள புற்றுநோயாளிகள், கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற மனநோயாளிகள் மற்றும் வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற முடியாத நோயாளிகள், மருந்துகளை உட்கொள்வதில் சிரமம் உள்ளவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், மூச்சுக்குழாய் தளர்ச்சி நோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கு தனிக்கவனத்துடன் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ேமலும் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறும்போது, மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதியாக ஒருங்கிணைந்த பன்மருந்து எதிர்ப்பு காசநோய் மையம் செயல்படுகிறது.

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்களில் ஒன்றாக காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் மருத்துவ சேவையுடன் ஊட்டச்சத்து பவுடர் நோயாளிகளுக்கு வாய்வழியாக மற்றும் ஊசி மூலம் வழங்கப்படுகிறது. இதனால் காசநோயாளிகள் இறப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. மேலும் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போது நாடித்துடிப்பு, நுரையீரல் தொற்று, உடல் வெப்பம் உள்ளிட்ட மருத்துவகுறியீடுகள் பரிசோதிக்கப்பட்டு, இதனடிப்படையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் விரைவாக பூரண குணமடைகின்றனர்’ என்றார். உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதிநாதன், நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் இளம்பரிதி மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Modern Treatment Center ,Lush ,Green ,Madurai Thopur ,
× RELATED பீர்க்கங்காய் கிரேவி