×

பொதுப்பணித்துறையில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வவுச்சர் ஊழியர்கள் வாட்டர் டேங்க் மேல் ஏறி போராட்டம்

புதுச்சேரி, மார்ச் 21: புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வாட்டர் டேங்க் மேல் ஏறி போராட்டம் நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு ஊழியர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் 1311 வவுச்சர் ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக அரசு உயர்த்திய நிலையில், நீண்ட காலமாக பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களை பல்நோக்கு பணியாளர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். வேண்டப்பட்டவர்களை மட்டும் பணிநிரந்தரம் செய்யும் அரசின் செயல்பாடுகளை கண்டித்து நேற்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு அரசு பணியாளர் கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊர்வலமாக அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் சாலை வழியாக சட்டசபையை முற்றுகையிட வந்தனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார், யுகோ வங்கி அருகிலேயே தடுத்து நிறுத்தினர்.

அப்போது முதல்வர் தொகுதியைச் சேர்ந்த 700 பேரை பணிநிரந்தரம் செய்ததை கண்டித்து முழக்கமிட்டு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது ஊழியர்கள் சிலரது சட்டை கிழிந்து கீழே விழுந்ததில் ரத்தக் காயமும் ஏற்பட்டது.
பின்னர் கறிக்குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கும் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களிடம் பெயர், முகவரி பெற்றுக்கொண்டு விடுதலை செய்தனர். அப்போது இதனை தொடர்ந்து அருகில் உள்ள உப்பளம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் மீது 100க்கும் மேற்பட்டோர் ஏறி தற்கொலை செய்வதாக கூறி மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த எதிர்கட்சி தலைவர் சிவா, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, கல்யாணசுந்தரம், நேரு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இதுசம்பந்தமாக சட்டசபையில் பேசுவதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Public Works Department ,
× RELATED தொழுவூர் கிராம ஏரியில் தேசிய...