×

தோடர் மகளிர் சுய உதவிக்குழுவினரின் எம்ராய்டரி பணி புதுக்கோட்டை அதிகாரிகள் கேட்டறிந்தனர்

ஊட்டி, மார்ச் 18: புதுக்கோட்டை  மகளிர் திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நீலகிரி மாவட்டத்தில் தோடர்  மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மேற்கொள்ளும் எம்ராய்டரி  பணிகளை பார்வையிட்டனர்.  தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை  சேர்ந்த பெண்கள் பல்வேறு கைவினைத் தொழில்கள் உட்பட பல்வேறு தொழில்களை  மேற்கொண்டு வருகின்றனர். அந்தந்த மாவட்டங்களுக்கென உள்ள தொழில்களை இவர்கள்  மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் பழங்குடியின  பெண்கள் கை எம்ராய்டரியில் கைத் தேர்ந்தவர்கள். இவர்கள் பழங்காலம் முதல்  இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் உடுத்தும் ஆடைகளான சால்வையில்  எம்ராய்டரி செய்து உடுத்துவது வழக்கம். தற்போது இவர்கள் சால்வை, கோட்,  பேக்குகள் போன்றவைகை எம்ராய்டரி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை  சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, வெளிநாட்டை  சேர்ந்த சுற்றுலா பயணிகள் இவர்களின் எம்ராய்டரி தயாரிப்புக்களை வாங்கிச்  செல்வது வழக்கம். இந்நிலையில், இவர்கள் தயாரிப்புக்கள் மற்றும் மகளிர்  குழுக்களின் செயல்பாடுகள் குறிந்து அறிந்துக் கொள்ள புதுக்கோட்டை மாவட்டம்  மகளிர் திட்ட உதவி அலுவலர் மூர்த்தி தலைமையில் 16 சமுதாய  ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று ஊட்டி வந்தனர்.

இவர்கள், ஊட்டி தோடர்  பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் எம்ராய்டரி  மேற்கொள்வது குறித்து கேட்டறிந்தனர். மேலும், அவர்கள் தங்களது  தயாரிப்புக்களை சந்தைப்படுத்தவது குறித்தும் கேட்டறிந்தனர். தாவரவியல்  பூங்காவில் உள்ள தோடர் பழங்குடின மக்கள் விற்பனை நிலையத்தில் இந்த  சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பயிற்சிகள் நடந்தது.
தொடர்ந்து  புதுக்கோட்டை மகளிர் திட்ட உதவி அலுவலர் மூர்த்தி கூறுகையில், எங்கள்  மாவட்டத்தில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பல்வேறு பொருட்களை  தயாரித்து விற்பனை செய்கின்றனர். எனினும், அவைகளை முறையாக சந்தைப்படுத்த  தெரியாமல் உள்ளனர்.

அதேசமயம் நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடியின  பெண்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை வீதிகளில் கடை வைத்துள்ளவர்கள்  மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்து தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை  விற்பனை செய்து வருகின்றனர். எனவே, இவர்கள் எவ்வாறு தாங்கள் தயாரித்த  பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்பதை கேட்டறிந்தோம். இதனை புதுக்கோட்டை  மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

Tags : Pudukottai ,Thodar Women's Self Help Society ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...